Home Featured நாடு ஹூடுட் : தே.மு. சமர்ப்பிக்காது – நஜிப் பின்வாங்கினார்!

ஹூடுட் : தே.மு. சமர்ப்பிக்காது – நஜிப் பின்வாங்கினார்!

1078
0
SHARE
Ad

Najib-

கோலாலம்பூர் – ஷாரியா நீதிமன்றங்களின் அதிகாரத்தை அதிகரிக்கும் நோக்கில் பாஸ் கட்சி கொண்டுவர முனையும் ஹூடுட் சட்டத்தை தேசிய முன்னணி அரசாங்கமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என முன்பு அறிவித்திருந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அந்த அறிவிப்பிலிருந்து பின்வாங்கினார்.

நேற்று  புதன்கிழமை இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நஜிப், தனது அரசாங்கம் இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழியாது என்றும், மாறாக, பாஸ் தலைவர் ஹாடி அவாங் சமர்ப்பித்திருக்கும் இந்த தனிநபர் மசோதாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வாக்கெடுப்புக்கு விடுவதா இல்லையா என்பதை நாடாளுமன்ற அவைத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடப் போவதாகவும் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

MIC-logoமஇகா, மசீச உட்பட்ட தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகள் தேசிய முன்னணியே இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன.

இதன் காரணமாக, 60 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட தேசிய முன்னணியே சிதறிவிடும் என்ற நிலைமை எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க் கட்சிகளும் தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகள் நஜிப்புக்கும், அம்னோவுக்கும் ஆதரவாக வாய்மூடி, கைகட்டி நிற்பதாகக் கடுமையாகச் சாடி வந்தன.

இந்நிலையில், தனது முடிவிலிருந்து நஜிப் பின்வாங்கியிருப்பது, 14-வது பொதுத் தேர்தலை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் அவரது மற்றொரு அரசியல் சாதுரியமாகப் பார்க்கப்படுகின்றது.

நேற்றைய அறிவிப்பினால், தேசிய முன்னணியின் ஒற்றுமையும், கட்டுக் கோப்பும் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

நட்டாற்றில் விடப்பட்ட பாஸ் கட்சி

PAS-Logoஅதே சமயம், பாஸ் கட்சி நட்டாற்றில் விடப்பட்டிருக்கின்றது. தேசிய முன்னணியோடு பாஸ் கைகோர்க்கும், அதன் முன்னோட்டம்தான் ஹூடுட் சட்டத்திற்கு, தேசிய முன்னணியின் ஆதரவளிக்கும் நடவடிக்கை என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றுகள் தற்போது பொய்யாகிவிட்டன.

தனக்கு ஆதரவளிக்காத தேசிய முன்னணியுடன், இனியும் பாஸ் கைகோர்க்குமா என்பது சந்தேகம்தான்.

தனித்து விடப்பட்டிருக்கும் பாஸ் இனி, வேறு வழியின்றி பக்காத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணையலாம். அல்லது தொடர்ந்து வீம்பாக ஹூடுட் சட்டத்தைக் கொண்டு வருவோம் என அவர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தால், பக்காத்தான் ஹரப்பானும் அவர்களை ஏற்றுக் கொள்ளாது.

இதனால், தனித்துப் போட்டியிட்டு, மும்முனைப் போட்டியில் மோசமான தோல்விகளைச் சந்திக்கும் நிலைமைக்கு பாஸ் கட்சி தள்ளப்பட்டிருக்கின்றது.

பாஸ் கட்சியோடு நெருக்கம் பாராட்டி, அதனை எதிர்க்கட்சி கூட்டணியோடு இணைய விடாமல் தடுத்தது, ஹூடுட் சட்டத்தை நாங்களே சமர்ப்பிப்போம் என பாஸ் கட்சிக்கு ஆசை வார்த்தை காட்டியது, எனக் கட்டம், கட்டமாக, அந்தக் கட்சியை நகர்த்திச் சென்று தற்போது அதை நட்டாற்றில் விட்டு விட்டது, நஜிப்பின் மற்றொரு அரசியல் சாதுரியமாகவும், வியூகமாகவும் பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக, பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் கூடியிருக்கின்றது.

செப்டம்பரில் பொதுத் தேர்தல் நடைபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் பிரதமர் மகாதீரும் இதே ஆரூடத்தைக் கூறியிருக்கின்றார்.

இந்தியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த ஹூடுட் சட்டத்தை மஇகாவும் கடுமையாக எதிர்த்து வந்தது.

நாளை வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பயணம் செல்வதன் மூலம் மலேசிய இந்தியர்களிடையே சாதகமான மனோநிலையைத் தோற்றுவித்திருக்கும் நஜிப், இந்த தருணத்தில், ஹூடுட் சட்டத்திலிருந்து பின்வாங்கியிருப்பது இந்தியர்களிடையே அவர் மீதான நன்மதிப்பை மேலும் உயர்த்தும்.

-இரா.முத்தரசன்