கோலாலம்பூர் – வரும் வெள்ளிக்கிழமை 5 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா செல்லவிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோரும், டெல்லி, ஜெய்ப்பூர், சென்னை ஆகிய மூன்று நகரங்களுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், நஜிப் தனது சென்னைப் பயணத்தின் போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து ‘தி டெலகிராப்இந்தியா.காம்’ என்ற இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், மலேசியப் பிரதமர் நஜிப், டெல்லி சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துவிட்டு, அடுத்ததாக ரஜினியைச் சந்திப்பதற்கு தான் முன்னுரிமை கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
நஜிப்பின் 5 நாட்கள் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளின் பட்டியல் தங்களிடம் காட்டப்பட்டதாகவும், அதன் படி, சென்னையிலுள்ள மலேசியத் தூதரகம், இச்சந்திப்பிற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருப்பதாகவும் அந்த இணையதளம் கூறுகின்றது.
இதனிடையே, இச்சந்திப்பிற்கு ரஜினி தரப்பில் இருந்து இன்னும் உறுதியான பதில் வரவில்லை என்றும், இன்னும் இரண்டு நாட்களில் ரஜினி தரப்பில் இருந்து பதில் வரலாம் என்றும் கூறப்படுகின்றது.
நஜிப்பும், அவரது துணைவியார் ரோஸ்மாவும், இந்தியத் திரைப்படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பவர்கள். இதனை ரோஸ்மா கூட ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக ஷாருக்கானின் தீவிர ரசிகர்களான இருவரும், அவ்வப்போது ஷாருக்கான் நடித்தத் திரைப்படங்களைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பவர்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு, மலேசியாவில் ‘கபாலி’ திரைப்படம் படமாக்கப்பட்டது. அத்திரைப்படத்தைப் பார்த்த பின்னர், நஜிப்பும், ரோஸ்மாவும் ரஜினியின் ரசிகர்களாகியிருப்பதாகக் கூறப்படுகின்றது.
அண்மையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில், மலாக்கா மாநிலத்தின் சுற்றுலாத்துறைக்கு ரஜினியை தூதராக நியமிக்கலாம் என மலேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மொகமட் நஸ்ரி கலந்தாலோசித்தார்.
எனவே, பிரதமர் நஜிப்பும், அவரது மனைவி ரோஸ்மாவும் சென்னைப் பயணத்தின் போது ரஜினியைச் சந்தித்தால், இது குறித்து கலந்து பேச நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், நஜிப் – ரஜினி இடையிலான சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: செல்லியல்