கோலாலம்பூர் – நாளை வெள்ளிக்கிழமை 5 நாள் வருகை மேற்கொண்டு இந்தியா பயணமாகும் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் குழுவில் இடம் பெற்றிருக்கும், மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இன்று வியாழக்கிழமை தனது குழுவினருடன், சென்னை புறப்பட்டுச் சென்றார்.
நாளை வெள்ளிக்கிழமை நஜிப் சென்னை வந்தடைகின்றார். அங்கு அவரது குழுவினருக்குப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
தனது வருகை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சுப்ரா “மலேசியா – இந்தியா என இருநாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு மைல் கல்லாக நஜிப்பின் வருகை அமையும். நஜிப் மேற்கொள்ளும் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதோடு, இந்தியப் பிரதமருடன் நஜிப் நடத்தவிருக்கும் சந்திப்பும் பல நன்மைகளைப் பயக்கும் விதத்தில் அமையும். பல புதிய ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தாகும்” என்று கூறியிருக்கிறார்.
மோடியின் மலேசிய வருகையின்போது அவருடன் சுப்ரா…
2015-ஆம் ஆண்டில் நரேந்திர மோடி மலேசியாவுக்கு வருகை தந்தபோது, அவருடன் உடன் செல்லும் அமைச்சராகப் பணியாற்றிய சுப்ரா, மோடியுடன் பல நிகழ்ச்சிகளில் கோலாலம்பூரில் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, நஜிப்பின் இந்திய வருகையில் இணைந்திருப்பதன் மூலம் மீண்டும் மோடியைச் சந்திக்கவிருக்கின்றார் சுப்ரா.