கோலாலம்பூர் – கடந்த ஆண்டு பூச்சோங்கில் உள்ள மோவிடா கேளிக்கை விடுதியில், கையெறி குண்டை வீசி, 8 பேர் காயமடையக் காரணமான இருவர் மீது நேற்று புதன்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் தலா 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இமாம் வாஹ்யுதின் கார்ஜோனோ (வயது 21), ஜோனியஸ் ஆண்டிரி (வயது 25) ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிபதி நோர்டின் ஹசான் இத்தீர்ப்பை வழங்கினார்.
மேலும், அவர்கள் இருவரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு உதவிகள் செய்ததால், கூடுதலாகத் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அவர்கள் இருவரின் தண்டனைக் காலம் கடந்த் ஆண்டு அவர்கள் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து துவங்குவதாக நீதிபதி குறிப்பிட்டார். அதன் படி, இமாம் வாஹ்யுதினுக்கு கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதியிலிருந்தும், ஜோனியஸ் ஆண்டிரி ஜூலை 1-ம் தேதியில் இருந்தும் தண்டனைக் காலம் தொடங்கியது.
குற்றவாளிகள் இருவரும், ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில், கேளிக்கை மற்றும் மதுபானக்கூடங்களின் மீது குண்டு வீசுவது என முடிவெடுத்து, மோவிடா கேளிக்கை விடுதியின் மீது இரண்டு கையெறி குண்டுகளை வீசியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.