Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘டோரா’ – இப்படி ஒரு பேயைப் பார்த்திருக்க மாட்டீர்கள்!

திரைவிமர்சனம்: ‘டோரா’ – இப்படி ஒரு பேயைப் பார்த்திருக்க மாட்டீர்கள்!

868
0
SHARE
Ad

dora-nayanthara-mainகோலாலம்பூர் – பழிவாங்கும் பேய் படம் தான்.. ஆனால் பேய் யார்? என்பது தான் ‘டோரா’ படத்தின் மிக முக்கிய சிறப்பு அம்சம். டோராவைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது, பேயைக் கண்டு பயம் வருவதை விட, ஆச்சரியம் தான் மேலோங்குகிறது. அந்த ஆச்சரியத்தை படம் முழுவதும் கொடுத்திருக்கிறாரா புதுமுக இயக்குநர் தாஸ் ராமசாமி? என்பதைப் பார்ப்போம்.

அப்பா, மகளான தம்பி இராமையாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையில் நடக்கும் அன்பு, பாசம், செல்லச் சண்டைகள் இப்படி சாதாரணமாகத் தான் தொடங்குகிறது படம். இப்படியே ஒரு 15 நிமிடங்கள் ஓடிவிட, நயன்தாரா வாங்கும் ஒரு பழைய ஆஸ்டின் கேம்பிரிட்ஜ் காரில் இருந்து டாப் கியர் போட்டு வேகம் எடுக்கிறது திரைக்கதை.

ரசிக்க

#TamilSchoolmychoice

காரை வைத்து தம்பி இராமையா ஒரு பக்கம் காமெடியில் கலக்க, இன்னொரு பக்கம் அந்த காரால் ஏற்படும் வினோதமான விசயங்களை கவனித்து தனது முகபாவணைகளால் படம் பார்ப்பவர்களை இருக்கை விளிம்பிற்குக் கொண்டு வந்துவிடுகிறார் நயன்.

காட்சி ஒன்றில், அந்தக் கார், டோராவாக மாறும் போது, அதை அப்படியே நிழலாகக் காட்டியிருக்கும் விதம் உண்மையிலேயே மிரட்டுகிறது.

காரில் இருக்கும் ஆன்மா பற்றி ஒரு பிளாஷ்பேக் ஒன்று சொல்லப்படுகின்றது. அக்காட்சிகள் இளகிய மனம் படைத்தவர்களுக்கு கண்களில் நீரை வரவழைப்பது நிச்சயம்.

எல்லா சஷ்பென்சும் வெளிப்படுத்திய பிறகு, கடைசி 30 நிமிடங்களை, நயன்தாராவுக்காகவே ஒதுக்கியிருக்கிறார் இயக்குநர். இனி நயன்தாராவுக்கு பல இடங்களில் ரசிகர்கள் கட்டவுட் வைக்கும் அளவிற்கு ‘தல’-க்கு இணையாக மிகவும் ஸ்டைலாக நடந்து வருகிறார் நயன்தாரா.

அது மட்டுமா? போலீஸ் விசாரணையில், “எனக்குத் தெரியாது சார். நான் எதுவும் பண்ணல சார்” என்று அழுகையோடு சொல்லிவிட்டு, பின்னர் “இன்னும் ரெண்டு பேரைக் கொல்லுவேன். முடிஞ்சா தடுத்துப்பாரு” என்று அந்நியன் போல் சிரிப்பதெல்லாம், நயன்தாரா முழுசா “லேடி சூப்பர் ஸ்டாராக” மாறியிருப்பதைக் காட்டுகிறது. என்ன ஒன்னு, எங்கடா ஒடிந்து விழுந்து விடப் போகிறாரோ? என்று எண்ணும் அளவிற்கு மிகவும் எலும்பும் தோலுமாகப் பரிதாபமாகக் காட்சியளிக்கிறார். (அப்பப்ப கொஞ்சம் டயட் விடுங்க நயன்)

தந்தை கதாப்பாத்திரத்திற்கு தம்பி இராமையா நல்ல தேர்வு. “பவளப் பையா” என்று மகளை கொஞ்சம் அழகு மிகவும் ரசிக்க வைக்கின்றது. கார் ஓட்டுவதற்கு பைலட் உடை அணிந்து வருவது, சுடுகாட்டில் பேயைக் கண்டு அலறுவது என தம்பி இராமையாவின் நடிப்பு நம்மை மறந்து சிரிக்க வைக்கிறது.

போலீஸ் அதிகாரியாக ஹரீஸ் உத்தமன், தனது எதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். போலீசுக்கே உரிய உருட்டல், மிரட்டலுடன் அவரது உடல்மொழி மிகவும் கச்சிதமாகப் பொருந்துகிறது.

இவர்கள் தவிர, பிளாஷ்பேக்கில் வரும் குழந்தை நடிப்பு அருமை. டோராவின் நடிப்பிற்கும், காரின் நடிப்பிற்கும் தனிப் பிரிவில் விருதே கொடுக்கலாம்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், விவேக் மற்றும் மெர்வினின் பின்னணி இசையும் படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கின்றன.

குறைகள்?

இரண்டாம் பாதியில் எல்லா சஷ்பென்சும் உடைந்த பிறகு படத்தின் சுவாரசியம் தடாலடியாகக் குறைந்து விடுகிறது. அந்த இடங்களில், வில்லன்களுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

பழி வாங்கும் காட்சிகளில் போடப்படும் திட்டங்கள் அவ்வளவு சுவாரசியமாகவும், தெளிவாகவும் இல்லை. அதில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். அக்காட்சிகளில் பின்னணி இசையில் இருந்த வீரியம், நயன்தாராவின் நடிப்பிலோ, சொல்லப்பட்ட விதத்திலோ இல்லை.

அடிக்கடி இதயம் துடிப்பதைக் காட்டுவது, பாலா படத்திற்கு இணையாக கொடூரமாக அடித்துக் காயப்படுத்துவது இவைகளைத் தவிர்த்திருந்தால், நிச்சயமாக இப்படம் குழந்தைகளுக்குமானதாக இருந்திருக்கும்.

மொத்தத்தில், ‘டோரா’ – தாராளமாகப் பார்க்கலாம். ஆனால் படம் பார்ப்பதற்கு முன் டோரா யார் என்று மட்டும் தெரிந்து கொள்ளாதீர்கள். அதை திரையரங்கில் பார்ப்பது தான் சுவாரசியம்.

– ஃபீனிக்ஸ்தாசன்