Home Featured நாடு ஷாரியா சட்டத் திருத்தம்: அடுத்தது என்ன? பொதுத் தேர்தலா?

ஷாரியா சட்டத் திருத்தம்: அடுத்தது என்ன? பொதுத் தேர்தலா?

908
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோலாலம்பூர் – மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத முன்னுதாரணமாக, சர்ச்சைக்குரிய ஷாரியா நீதிமன்ற சட்டத் திருத்தம் மீதிலான தனிநபர் மசோதாவைச் சமர்ப்பிக்க பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், RUU355 என்ற எண் கொண்ட அந்த மசோதாவை முன்மொழிந்து அவர் உரையாற்றி முடிந்ததும், நாடாளுமன்ற அவைத் தலைவர், அதன் மீதிலான விவாதங்களை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு ஒத்தி வைத்தார்.

Malaysia-Parliamentநேற்றுடன் இந்தத் தவணைக்கான நாடாளுமன்றக் கூட்டம் நிறைவுக்கு வந்ததால், பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத் தலைவரின் இந்த முடிவு குறித்து கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். காரணம், அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் ஜூலை மாதத்தில்தான் நடைபெறும்.

#TamilSchoolmychoice

இந்த முடிவால், நாடாளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் நீடித்தது.

தேசிய முன்னணியின் இந்த சாமர்த்தியமான வியூகம் மேலும் பல ஆரூடங்களையும் கிளப்பியிருக்கிறது. குறிப்பாக, இனி இந்த ஷாரியா சட்டத்திருத்தம், நாடாளுமன்ற விவாதங்களுக்கு உட்படுத்தப்படாமலும், இனி அடுத்த நாடாளுமன்றம் வரை காத்திருக்க வேண்டிய நிலைமையிலும், திரிசங்கு சொர்க்கமாக அந்தரத்தில் நிற்கும்.

PAS-Logoஇதன் காரணமாக, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, ஜூலை மாதத்திலேயே 14-வது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஆரூடமும் தற்போது கூறப்படுகின்றது. விவாதங்கள் நடத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக, எழும் சர்ச்சைகள் நாட்டில் பெரும் கருத்து விவாதங்களையும், முரண்பாடான மோதல்களையும் உருவாக்கியிருக்கும். இப்போது அத்தகைய நிலைமை தவிர்க்கப்பட்டிருக்கிறது.

மே மாதம் 25-ஆம் தேதி வாக்கில் நோன்பு மாதம் தொடங்குகிறது. தொடர்ந்து ஜூன் 25-ஆம் தேதி வாக்கில் நோன்புப் பெருநாள் – ஹரிராயா புவாசா – கொண்டாடப்படும். அதனை அடுத்து ஜூலை மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய முன்னணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

BN Logoஅதற்கு மேல் பொதுத் தேர்தலை ஒத்திவைத்தால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி நெருக்கமாவதற்கும், அவர்களின் பிரச்சாரங்கள் தீவிரமடைவதற்கும் வழிவகுத்ததாக அமைந்து விடும்.

அதே வேளையில் பாஸ் கட்சி மீண்டும் பக்காத்தான் ராயாட் கூட்டணி பக்கம் சென்று விட கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்றும் பிரதமர் நஜிப் கருதுகிறார் என்பது அவரது நடவடிக்கையிலிருந்து தெரிகிறது. தற்போது, பாஸ் கட்சிக்கும், பக்காத்தான் ராயாட் கூட்டணிக்கும் இடையில் மிக மோசமான உறவுகள் இருப்பதால், உடனடியாக பாஸ் கட்சி மீண்டும் பக்காத்தான் கூட்டணிக்குத் திரும்ப வாய்ப்பில்லை.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஷாரியா சட்டத் திருத்தத்தை மீட்டுக் கொள்ளும் வாய்ப்பும் பாஸ் கட்சிக்கு இனி இல்லை என்பதால், முஸ்லீம் அல்லாதவர்களிடையே பாஸ் மீதான வெறுப்புணர்வும் மேலோங்கியே இருக்கும். பொதுத் தேர்தல் வாக்களிப்பிலும் இது பிரதிபலிக்கும்.

விடாப் பிடியாக, ஷாரியா சட்டத் திருத்தத்தைச் சமர்ப்பித்த பாஸ் கட்சியை மீண்டும் பக்காத்தான் கூட்டணியில் இணைத்துக் கொள்ள ஜசெக போன்ற கட்சிகள் கண்டிப்பாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

இனி நீண்ட காலத்திற்கு ஹாடியின் தனி நபர் மசோதாவை, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறச் செய்யாமல் தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறக் கூடும் என்ற ஆரூடங்களுக்கு இடையில், செப்டம்பரில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற ஆரூடமும் சிலரால் கூறப்படுகின்றது.

-இரா.முத்தரசன்