Home Featured நாடு கோல குபு பாருவில் மாயமான பாராகிளைடர் வீரர் உயிருடன் மீட்பு!

கோல குபு பாருவில் மாயமான பாராகிளைடர் வீரர் உயிருடன் மீட்பு!

760
0
SHARE
Ad

Paraglidingகோலாலம்பூர் – கோல குபு பாருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராகிளைடர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த முகமட் ரோஸ்லி அஸ்லி (வயது 53) என்பவர், மோசமான வானிலை காரணமாக காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டரின் மூலம் தேடுதல் பணிகளை மேற்கொண்ட போது, ஒரு இடத்தில், பாராசூட்டுடன் விழுந்து கிடந்த ரோஸ்லியை உயிரோடு மீட்டிருக்கின்றனர்.

சாவை நெருங்கிய தனது மோசமான அனுபவம் குறித்து ரோஸ்லி கூறுகையில், வேகமான காற்றில் தனது பாராசூட் இழுத்துச் செல்லப்பட்டு, சுமார் 1,200 மீட்டர் உயரத்திற்கு மேகங்களுக்குள் சென்று விட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“நான் மிகவும் பதற்றமாகிவிட்டேன். பல வழிகளில் கீழே இறக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. என்னுடைய தொடர்புக் கருவியும் (walkie-talkie) கீழே விழுந்துவிட்டது. ஒரு மிக பயங்கரமான சூழலுக்குத் தள்ளப்பட்டேன். நான் சாகக் கூடாது என்று பிரார்த்தனை செய்தேன்” என்று ரோஸ்லி தெரிவித்திருக்கிறார்.

மேலும், அவரது பாராசூட் மிக உயரத்திற்குச் சென்று மேகங்களுக்குள் சென்றுவிட்டதால், மூச்சுத் திணறலுக்கு ஆளான ரோஸ்லி, மயக்கமடைந்திருக்கிறார்.

அவருக்கு மீண்டும் நினைவு திரும்பிய போது, மாலை 6 மணி. அப்போது தான் நிலத்தில் விழுந்து கிடப்பதை உணர்ந்திருக்கிறார்.

“வானம் இருட்டத் தொடங்கிவிட்டது. அசான் தொழுகை என் காதில் விழுந்தது. என்னால் சாலை விளக்குகளைக் கூட பார்க்க முடிந்தது. ஆனால் நான் முற்றிலும் சோர்வடைந்த நிலையில் இருந்ததால், இரவு முழுவதும் பாராசூட்டுக்கு அடியில் தங்க வேண்டியதாகிவிட்டது” என்று ரோஸ்லி கூறியிருக்கிறார்.

மறுநாள் அதாவது நேற்று திங்கட்கிழமை, ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமடிப்பதைப் பார்த்த ரோஸ்லி, கையசைத்திருக்கிறார். இதனையடுத்து, அவரைப் பார்த்துவிட்ட மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரை தரையிறக்கி ரோஸ்லியை மீட்டிருக்கின்றனர்.

உலு சிலாங்கூர் ஓசிபிடி கண்காணிப்பாளர் ஆர்.சுப்ரமணியம் கூறுகையில், தரையிறங்க வேண்டிய தாமான் மில்லெனியம் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோ தொலைவில் மொகமட் ரோஸ்லி காணப்பட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.