புதுடெல்லி, மார்ச் 22- இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு இன்று மகாராஷ்டிரா கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். இதில் 1993-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்தை மன்னிக்க கோரியிருந்தார்.
1993-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் அவர் நேரடியாக பங்குகொள்ள வில்லை என்பதால் அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இது கொலை போன்ற பெரிய குற்றம் அல்ல. குண்டு வெடிப்புடன் எந்த சம்பந்தமும் இல்லாத போதும் அவர் தீவிரவாதி என கைது செய்யப்பட்டார். கடந்த 20 வருட காலத்தில் அவர் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். ஒவ்வொரு முறை வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்லும் போதும் நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும்.
இது போன்ற பல அலைக்கழிப்புகளை சந்தித்து விட்டார். இவரின் பெற்றோர் சமூகத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளனர். இதனால் சஞ்சய் தத்தை மன்னிக்கவேண்டும்” என்றார்.
இதுதொடர்பாக பாராளுமன்றத்துக்கு வெளியே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணிஷ் திவாரி கூறியதாவது:-
ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து கட்ஜு கருத்து தெரிவித்தால், அதனை அரசும் மற்றவர்களும் உன்னிப்பாக கவனிக்கின்றனர். ஆனால் இந்த விசயத்தை பொருத்தமட்டில் பலவற்றை கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. இந்த விசயத்தை கையாளும் அரசின் பல்வேறு அமைப்புகள், இவருடைய கருத்தை கவனத்தில் கொள்ளும்.
தேவைப்பட்டால் இதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பாக கவர்னரை சந்தித்து சஞ்சய் தத்தை விடுதலை செய்ய வேண்டும் என முறையிட உள்ளதாக ஜெயா பச்சனும் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் பிரபலங்களும் சஞ்சய் தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினி காந்த், சஞ்சய் தத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.
“சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அதேவேளையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது.
இந்த தண்டனையிலிருந்துஅவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.