இலங்கை, மார்ச். 22- இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. இதற்கு இலங்கையின் சிங்களர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் இறையாண்மையை மதிக்காத இந்தியாவுடனான ராஜதந்திர மற்றும் வர்த்தக தொடர்புகள் துண்டிக்கப்பட வேண்டும். இந்தியா இல்லாத ஆசிய சகோதரத்துவ கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் கொள்கையை அரசாங்கம் வகுக்க வேண்டும். பயங்கர வாதத்தை இல்லாதொழித்து அனைத்து மக்களுக்கும் உயிர் வாழும் வரத்தை அளித்த குற்றத்திற்காக அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் செயல்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி பாராட்ட வேண்டும். அமெரிக்காவும், இந்தியாவும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சிக்கின்றன. இவ்வாறான நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு சார்பாக செயற்பட்டு வரும் நிலையில் அவரது ஒத்துழைப்புடன் விசாரணை நடத்துமாறு விடுக்கப் பட்டுள்ள கோரிக்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
வெளிநாட்டு தீர்மானமொன்றின் அடிப்படையில் உள்நாட்டில் விசாரணை நடத்த அனுமதியளிக்கப்படக்கூடாது என்றும் அந்த சிங்களக் கட்சி தெரிவித்துள்ளது.