Home Featured கலையுலகம் அஸ்ட்ரோ விழுதுகளில் 6 புதிய அறிவிப்பாளர்கள்!

அஸ்ட்ரோ விழுதுகளில் 6 புதிய அறிவிப்பாளர்கள்!

1277
0
SHARE
Ad

Astronewhostsசென்னை – கடந்த 10 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்களிடம் மிகுந்த வரவேற்பினைப் பெற்று வரும் அஸ்ட்ரோ ‘விழுதுகள்’ நிகழ்ச்சியில், நாளை வெள்ளிக்கிழமை முதல் புதிய அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள்.

குணசீலன் சிவக்குமார், ஸ்ரீகுமரன் முனுசாமி,ரேவதி மாரியப்பன், கபிலன் கணேசன், செல்வக்குமாரி செல்வராஜு, அகலியா மணியம் என 6 அறிவிப்பாளர்கள், விழுதுகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக புதிதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Agilaஇவர்களை ஊடகங்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்றது. அறிவிப்பாளர்கள் முக்சின் அப்துல் அஜிஸ் மற்றும் அகிலா சண்முகம் ஆகிய இருவரும் நிகழ்ச்சியைக் கலகலப்பாக வழி நடத்த, 6 புதிய அறிவிப்பாளர்களும் விழுதுகள் அறிவிப்பாளர்களாகத் தேர்வானது குறித்த தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், விழுதுகளில் இன்று வரை சிறப்பாக நிகழ்ச்சி படைத்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வந்த சுரேஷ் திருஞானசம்பந்தன், சத்யாமுரசன் செங்கல்வராயன், நதியா ஜெயபாலன், இந்துமதி ஆகியோரும் மேடையில், விழுதுகள் குறித்த தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, புதிய அறிவிப்பாளர்களுக்குத் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

6 புதிய அறிவிப்பாளர்கள் பற்றிய அறிமுகம்:

குணசீலன் சிவக்குமார்

Gunaseelan‘யுத்த மேடை’ உள்ளிட்ட பல்வேறு அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளுக்கு எழுத்தாளராக இருந்திருக்கிறார் என்பதோடு, தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பில் திறம்பட மேடையில் பேசும் ஆற்றல் கொண்டவர். அத்திறமையின் காரணமாக, ‘சந்திப்போம் சிந்திப்போம்’, ‘பேசு தமிழா பேசு’, ‘ஓரங்கநாடகம்’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார். கடந்த ஆண்டு ஆஸ்தான ஆர்ட்ஸ் வழங்கிய ‘ஹனுமன்’ மேடை நாடகத்திற்கு திரைக்கதை எழுதியதோடு, அறிவிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

விழுதுகள் அறிவிப்பாளராகத் தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிப்பதாக குணசீலன் தெரிவித்தார்.

ஸ்ரீகுமரன் முனுசாமி

srikumaranடிஎச்ஆர் வானொலியில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர். இவரது கணீர் குரல் டிஎச்ஆர் வானொலி கேட்பவர்களுக்கு நன்கு பரீட்சயம். சிறுவயதில் இருந்தே தமிழ் மொழி மீது அதிக நாட்டம் கொண்டவர்.

‘விழுதுகள்’ அறிவிப்பாளர் ஆக வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியிருப்பதாக ஸ்ரீகுமரன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நல்ல தமிழில், அருமையான தகவல்களோடு இடம்பெறும் விழுதுகள் நிகழ்ச்சியில் தனது பங்களிப்பை சிறப்பாகச் செய்யவிருப்பதாகவும் ஸ்ரீகுமரன் குறிப்பிட்டார்.

ரேவதி மாரியப்பன்

Revathyரேவதி மாரியப்பன் அஸ்ட்ரோ தொலைக்காட்சி ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான முகம் தான். அண்மையில் நடைபெற்ற அஸ்ட்ரோ ‘சூப்பர் ஸ்டார் என்றும் 16’ நிகழ்ச்சியை அறிவிப்பாளர் குமரேசுடன் இணைந்து வழங்கியவர். தனது துறுதுறு பேச்சால் பலரையும் கவரக்கூடிய ஆற்றல் கொண்டவர். அதோடு, அஸ்ட்ரோவின் விழா கால சிறப்பு நிகழ்ச்சிகளிலும், 360 பாகை நிகழ்ச்சியிலும் அறிவிப்பாளராக இருந்திருக்கிறார்.

விழுதுகளில் இணைந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்று கூறிய ரேவதி,  பல நல்ல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

கபிலன் கணேசன்

Kabilanகபிலன் கணேசன், அஸ்ட்ரோ 360 பாகை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராக இருப்பவர். இனி விழுதுகள் அறிவிப்பாளராக நிகழ்ச்சி படைக்கவிருக்கிறார்.

360 பாகை நிகழ்ச்சி முன்பே பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி, ஆனால் விழுதுகளில் நேரலையில் பேசவிருப்பது தனக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்று கபில் தெரிவித்தார்.

செல்வக்குமாரி செல்வராஜு

Selvakumari2013-ம் ஆண்டு ‘யுத்தமேடை ஜூனியர்’ நிகழ்ச்சியில் அறிவிப்பாளராக அறிமுகம் ஆகி, கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு தற்போது விழுதுகள் அறிவிப்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த முறை விழுதுகள் அறிவிப்பாளருக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்ட செல்வக்குமாரிக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் விடாமுயற்சியுடன் மீண்டும் தொடர்ந்து நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு இம்முறை விழுதுகள் அறிவிப்பாளராகும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்.

இந்த வாய்ப்பை நிச்சயமாக சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவிருப்பதாக செல்வக்குமாரி தெரிவித்தார்.

அகலியா மணியம்

Agaliyaதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அனுபவம் இல்லாவிட்டாலும் தனது பள்ளி நாட்களில் இருந்து விழுதுகள் நிகழ்ச்சியை மிகவும் ஆர்வத்தோடு கண்டு ரசித்து வருபவர்.

பிஎம்ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சியடைந்த போது தனது புகைப்படம் வெளியிடப்பட்ட நாளிதழ், விழுதுகள் நிகழ்ச்சியில் காட்டப்பட்டதாகவும், இப்போது அதே நிகழ்ச்சிக்கு அறிவிப்பாளராகும் வாய்ப்பு தனக்குக் கிடைத்திருப்பது மிகவும் பெருமை என்றும் அகலியா மணியம் கூறினார்.

அகலியாவிற்கு இன்னொரு திறமையும் இருப்பது அண்மையில் திரைப்படம் ஒன்றின் மூலம் தெரிய வந்தது. இளம் இயக்குநர் கவி நந்தன் இயக்கத்தில் உருவான ‘வெண்பா’ என்ற திரைப்படத்தில் அகலியா கதாநாயகியாக நடித்திருந்தார். இளைஞர்கள் மத்தியில் அத்திரைப்படம் மிகவும் வரவேற்பினைப் பெற்றது. குறிப்பாக அகலியாவின் கதாப்பாத்திரம் பலராலும் ரசிக்கப் பட்டது.

இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த 6 புதிய அறிவிப்பாளர்களும், இனி அஸ்ட்ரோ தமிழ் அலைவரிசைகளில், ‘விழுதுகள்’ நிகழ்ச்சியின் மூலம் பல சுவையான தகவல்களை வழங்கி, நம்ம வீட்டுப் பிள்ளையாக இருக்கப் போகிறார்கள்.

அவர்களுக்கு ‘செல்லியல்’ சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-செல்லியல் தொகுப்பு