Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘பவர் பாண்டி’ – கதையிலும், திரைக்கதையிலும் ராஜ்கிரண் நடிப்பிலும் சூப்பர் பவர்!

திரைவிமர்சனம்: ‘பவர் பாண்டி’ – கதையிலும், திரைக்கதையிலும் ராஜ்கிரண் நடிப்பிலும் சூப்பர் பவர்!

1141
0
SHARE
Ad

Power Pandi1கோலாலம்பூர் – நடிகராகி, பாடகராகி, கவிஞராகி, தயாரிப்பாளராகி இப்போது இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கும் தனுஷ், முதல் படமாக, ராஜ்கிரணை வைத்து ‘பவர் பாண்டி’ திரைப்படத்தை இயக்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஒரு காலத்தில் தனது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு முதல் படம் இயக்க (அப்போது முன்னணி நடிகராக இருந்த) வாய்ப்பு கொடுத்த ராஜ்கிரணையே, கதாநாயகனாக்கி அழகு பார்த்திருக்கிறார் மகன் தனுஷ்.

படத்தின் பின்னணியே இவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்கும் போது, படம் எவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்கும்? – ஆமாம் சந்தேகமே இல்லை. ரொம்பவே உணர்வுப்பூர்வமாக இருக்கிறது.

#TamilSchoolmychoice

ராஜ்கிரண்.. அவரது அகலமான உடம்பைப் போலவே.. திரையிலும் முழுக்க முழுக்க அவர் தான் நிறைந்திருக்கிறார். ஒரு காலத்தில் பேரும் புகழோடும், வீரமும், தீரமுமாக இருந்த சினிமா ஃபைட் மாஸ்டரின் வயதான காலம் எப்படி இருக்கிறது? தனது குடும்பத்திலும் சமூகத்திலும் எப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மையக்கரு.

படம் தொடக்கத்திலிருந்து ஏதோ பக்கத்து வீட்டில் நடப்பதைப் போல் மிகவும் எதார்த்தமாக இருப்பதே நமக்கும், கதைக்குமான நெருக்கத்தை அதிகரிக்கிறது.

வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே சண்டையை இழுத்துக் கொண்டு வரும் ராஜ்கிரணின் கதாப்பாத்திரம், விசு படம் ஒன்றை நினைவுப்படுத்துகிறது. அத்திரைப்படத்தில் வயதான காலத்தில் மகன் வீட்டில் வாழ்ந்து வரும் விசு, பக்கத்துவீட்டுப் பிரச்சினைகளிலெல்லாம் தலையிட்டு, மகனுக்கு கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

அதேபோல் ‘பவர் பாண்டி’ திரைப்படத்திலும் அந்தத் தெருவில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கிறார் அப்பாவி ராஜ்கிரண். இதனால் அவருக்கு ரௌடிகள், போலீஸ் என பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகள் வீடு தேடி வருகின்றன. எந்த வம்பு தும்புக்கும் போகாமல் ஐடி வேலையில் கௌரவமாக வாழ்ந்து வரும் ராஜ்கிரணின் மகன் பிரசன்னா – சாயா சிங் தம்பதிக்கு இது பெரும் தொல்லையாகவும், கௌரவக் குறைச்சலாகவும் இருக்கிறது.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்தை அடையும் பிரசன்னா, “வீட்டுல சும்மா இருங்கப்பா? நீங்க சும்மா இருந்தாலே போதும் எங்களுக்குப் பிரச்சினையே இல்ல” என்று எரிஞ்சு விழ, மகனுக்குப் பாரமாக இருக்க விரும்பாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு, 25 லட்ச ரூபாய் சேமிப்புப் பணத்தோடு வீட்டை விட்டு வெளியேறுகிறார் ராஜ்கிரண்.

ராஜ்கிரண் எங்கு போகிறார்? யாரைத் தேடிப் போகிறார்? என்பதே பிற்பாதி சுவாரசியம்.

நடிப்பு

ராஜ்கிரணின் நடிப்பைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தன்னால் தந்தை கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும்  என்பதைப் பல திரைப்படங்களில் நிரூபித்திருக்கிறார். இதில் தந்தையாக மட்டுமின்றி, மனதளவில் மிகவும் இளமைத் துடிப்போடு இருக்கும் ஒரு 64 வயது ஆணின் கதாப்பாத்திரம். அதை மிக இயல்பாக தனது பாணியில் மிகவும் ரசிக்கும் வகையில் செய்திருக்கிறார்.

பக்கத்துவீட்டு இளைஞனிடம் பீர் வாங்கிக் குடித்துவிட்டு மகன் பிரச்சன்னாவிடம் தனது ஆதங்கத்தை கோபமாக வெளிப்படுத்துவது, சண்டைக் காட்சியில் நடித்துவிட்டு பாராட்டுகள் கிடைக்கும் போது கண்கள் கலங்குவது, பேரக் குழந்தைகளிடம் அதை பெருமையாகச் சொல்வது, முன்னாள் காதலியான ரேவதியிடம், “இன்னும் நான் உன் மனசுல இருக்கேனா?” என்று கேட்டுவிட்டு, பதில் தெரிந்து கொள்ள அவரது வீட்டுக்கே செல்வது எனத் திரையில் ராஜ்கிரண் வரும் காட்சிகளிலெல்லாம் படம் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதே அவரது நடிப்பிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று சொல்லலாம்.

முன்னாள் காதலியாக ரேவதி கிளைமாக்சுக்கு அரை மணி நேரங்களுக்கு முன்பாக திரையில் வந்து, புன்னகையால், கண்ணீரால், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் லேசான நடனத்தால், முகபாவணைகள் கவர்ந்திழுக்கிறார்.

“டேய்.. இங்க வந்து செத்துடாதடா” என்று ராஜ்கிரணைப் பார்த்து சொல்லும் வசனம் கூட, காலத்திற்கு ஏற்ற வகையில், சிரித்து ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார் தனுஷ்.

Power Pandiரேவதிக்கு மகளாக விஜய் டிவி புகழ் டிடி சில காட்சிகளே வந்தாலும் மிகவும் அழுத்தமான வசனங்களால் மனதை நிறைத்துவிட்டுப் போகிறார். அம்மாவின் காதலை மிகவும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் டிடி,”ஏம்மா.. சின்ன வயசுல விதவை ஆனவங்களுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறத ஏத்துக்குற உலகம் அதையே தனியமையில இருக்குற வயசானவங்க செஞ்சா ஏன் ஏத்துக்க மாட்டேங்குது? நீயும் சிங்கிள்.. அவரும் சிங்கிள் அப்புறம் என்ன?” – என்று கேட்பது ரசனை.

இரண்டாம் பாதியில் ராஜ்கிரணின் இளம் வயது கதாப்பாத்திரமாக தனுஷே நடித்திருக்கிறார். என்னது? ராஜ்கிரணின் இளம் வயதில் தனுஷா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் நம்பி ஏற்றுக் கொள்ளும்படியாக அதற்கு ஒரு காரணமும் சொல்லியிருக்கிறார். தனுஷ் வந்தவுடன் சட்டென நாம் ராஜ்கிரண் எப்போது மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவோம் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கும் தனுஷ், ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் சொல்ல வேண்டியவற்றை டக்கன சொல்லிவிட்டு மீண்டும் ராஜ்கிரணை திரையில் கொண்டு வந்துவிடுவது அதிபுத்திசாலித்தனமான முடிவு.

தனுஷுக்கு ஜோடியாக அதாவது ரேவதியின் இளம் வயதுக் கதாப்பாத்திரத்தில் மடோனா செபாஸ்டின் நடித்திருக்கிறார். குளோசப் காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகளில் அவரது முகம் அக்கதாப்பாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது.

பிரசன்னா .. ராஜ்கிரணின் மகனான அவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கிறார். அப்பாவின் சேட்டைகளால் எரிச்சலடைவது, “இந்த வயசுல வேலைக்குப் போய் இவரு சம்பாதிச்சு என்னத்த செய்யப் போறாரு?”, “ஃபைட் மாஸ்டராக இருந்தாலும் என்னை ஒரு நாள் கூட அடிச்சது இல்லை” என்று தொலைந்து போன அப்பாவை நினைத்து மனைவியின் மடியில் சாய்ந்து அழுவது என ஃபர்ஸ்ட் கிளாஷ் நடிப்பு. அதற்கு ஏற்ப சின்ன அழகான முகபாவணைகளோடு சாயா சிங் தனது இருப்பை அலங்கரிக்கிறார். ராஜ்கிரணின் பேரன், பேத்தியாக இரண்டு குழந்தைகள் நடித்திருக்கிறார்கள். அடஅட.. என்ன அழகு. அதுவும் குறிப்பாக அந்தச் சிறுவன்.. சூப்பர் நடிப்பு.

ஒளிப்பதிவு மற்றும் இசை

வேல்ராஜின் ஒளிப்பதிவில் சென்னை குடியிருப்புக் காட்சிகள், மார்கெட் காட்சிகள், நெடுஞ்சாலைகள், மதுரை, ஹைதராபாத் என அந்தந்த இடங்களுக்கு ஏற்றவகையில், கதைக்குத் தகுந்தது போல் மிக அழகாகப் பதிவாகியிருக்கிறது.

சீன் ரோல்டனின் இசையில், தனுஷ், செல்வராகவன், ராஜுமுருகன் வரிகளில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம். குறிப்பாக சூரக்காத்து, வானம் பாடல்கள் சட்டென மனதில் நிற்கும் ரகம்.

PowerPandi1எல்லோர் வீட்டிலும் இருக்கும் அப்பா, அம்மா என்ற வயதான இருவர், வீட்டில் சும்மா இருப்பதற்காகவோ, பேரக் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருப்பதற்காகவோ இல்லை. அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஆசைகள் இருக்கின்றன. காதல் இருக்கின்றது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் திரைப்படம் தான் ‘பவர் பாண்டி’.

பார்த்துவிட்டு வெளியே வரும் போது நிச்சயமாக வீட்டில் இருக்கும் வயதானவர்களின் நிலையை நமது மனசு தானாகவே அலசி ஆராய்ந்து பார்க்கும். அதேவேளையில், இப்படம் தனிமையில் இருக்கும் வயசானவர்களுக்குப் புத்துணர்ச்சியளிக்கும் படியாகவும் இருக்கும் என்பதே இயக்குநர் தனுஷின் புதிய அவதாரத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய முதல் வெற்றி.

ஃபைட் மாஸ்டரான ராஜ்கிரண் படத்தில் வரும் சண்டைக் காட்சிகளில் ஒரு வகையான குத்தைப் பின்பற்றுவார். எதிரிகள் அந்தக் குத்தை வயிற்றில் வாங்கியவுடன் ஒரு கொக்கியைப் போல் வளைந்து அப்படியே அசையாமல் நிற்பார்கள். அதேபோல், அண்மைய காலமாக தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளையெல்லாம், தனது திறமையால் ஓங்கி ஒரு குத்துவிட்டு, சினிமாவில் இனி தன்னை யாரும் அசைக்கவே முடியாது என்பதை இப்படம் மூலம் நிரூபித்திருக்கிறார் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்.

-ஃபீனிக்ஸ்தாசன்