கோலாலம்பூர் – இப்போதைய இயக்குநர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று, கையில் இருக்கும் கதையை அப்படியே காட்சிப்படுத்துவதா? அல்லது தயாரிப்பாளர் சொல்படிக் கேட்டு அதில் கமர்ஷியல் விசயங்களையும் திணிப்பதா? என்பது தான்.
அப்படி ஒரு குழப்பமான மனநிலையில் எடுக்கப்படும் படங்கள், நல்ல கதையாக இருந்தாலும் கூட அதில் இருக்கும் கமர்ஷியல் திணிப்புகளால் மக்களிடம் எடுபடாமல் போய்விடுகிறது.
அப்படி ஒரு குழப்பத்தில் தான் ‘கடம்பன்’ திரைப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராகவா. தங்களது மூதாதையர்கள் வாழ்ந்த காட்டைக் களவாட நினைக்கும் ஒரு கார்பரேட் கும்பலிடம், மல்லுக்கட்டி, தங்களது காட்டை மீட்க நினைக்கும் கடம்பவன மக்களின் கதை தான் ‘கடம்பன்’.
இது வெறும் கடம்பவன மக்களின் பிரச்சினை மட்டுமில்லை. உலகமே இன்று எதிர்நோக்கியிருக்கும் ஒரு பெரும் பிரச்சினை. அப்படி ஒரு பிரச்சினையைக் காட்சிப்படுத்தும் போது, சினிமாத்தனத்தைத் தவிர்த்து எது உண்மையோ அதை எதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருந்தால் இப்படத்துடன் மக்களால் ஒன்றியிருக்க முடியும்.
முதல் காட்சியில், பளபளக்கும் சிக்ஸ்பேக் உடம்புடன், மாடல் போல் ஆர்யா திரையில் தோன்றும் போதே படம் தனது எதார்த்தத்தை இழந்துவிடுகிறது. கடைசி வரை ஆர்யாவைக் கடம்பனாகப் பார்க்க முடியாமல் போனதற்கு, புரதப் பவுடர்களால் செதுக்கி வைத்தது போல் இருக்கும் அந்த உடம்பு தான் காரணம். இந்தக் கதையை அதன் போக்கிலேயே எடுத்து, அதில் நடிகர் முருகதாசையே கதையின் நாயகனாகக் காட்டியிருந்தாலும் ரசிக்க வைத்திருக்கும்.
அதே தான் கதாநாயகி கேத்ரின் தெரசாவிற்கும். பேஸ்புக், டுவிட்டர், வாட்சாப் என நட்பு ஊடகங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், காடு, மேடு, மழை, வெயில் என்று இயற்கையோடு, இயற்கையாக வாழ்ந்து வரும் பழங்குடியினப் பெண்ணின் முகம் எப்படி இருக்கும் என்று சிறு பிள்ளைக்கும் தெரியும். அப்படியிருக்க, செயற்கை பொலிவூட்டிகளால் மெருகூட்டப்பட்ட ஒரு முகத்தைக் காட்டி, பழங்குடியினப் பெண் என்று நம்பச் சொல்கிறார் இயக்குநர்.
அடுத்ததாக, பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையில், மலைகளின் மீது ஏறி தேன் எடுப்பது,உயரமான மரங்களின் மீது ஏறுவது, மிருகங்களை வேட்டையாடுதல் போன்றவை இயல்பு தான். ஆனால் அதற்காக படத்தில் அவர்களை 100 அடி உயர அருவியில் இருந்து குதிப்பது, இருபது முப்பது ஏ.கே.47 துப்பாக்கிக் குண்டுகளில் இருந்து தப்பிப்பது, காட்டில் விளையும் ஒருவகைக் காய்களை எரிந்து 30, 40 லாரிகளைச் சேதப்படுத்துவது, காட்டுயானைகளுக்கு நடுவே ஓடி வருவது என சூப்பர்மேன்களைப் போல் காடியிருப்பதெல்லாம் சினிமாத்தனத்தின் உச்சம்.
கார்பரேட் நிறுவன முதலாளியாக வில்லன் தீபரஜ் ரானா, வனத்துறை அதிகாரி ஒருவரைக் கையில் போட்டுக்கொண்டு நூற்றுக்கணக்கான ஆட்களை துப்பாக்கிகள், வெடிகுண்டுகளோடு அனுப்பி காட்டை அழிப்பதும், பழங்குடியின மக்களைக் கொல்வதுமாகக் காட்டியிருக்கிறார்கள். ஊருகாயாகக் கூட அரசாங்கத்தைக் காட்டவில்லை.
அதேபோல், நிஜ வாழ்வில் முடிவுக்கே வராத இந்த விவகாரத்தில், அதர பழசான சினிமா சம்பிரதாயங்களைக் கொண்ட ஒரு கிளைமாக்சை பார்க்க சகிக்க முடியவில்லை. அதைப் பார்த்து கைதட்டி மனதை நிறைவு செய்து கொள்ளும் அளவிற்கா மக்கள் உலகம் தெரியாமல் இருக்கிறார்கள்?
இப்படியாக, படத்தில் பல நம்ப முடியாத காட்சிகள், கதையின் எதார்த்தத்தைக் கெடுப்பதோடு, படம் பார்க்கும் நமது மனநிலையையும் மாற்றிவிடுகிறது.
பாராட்டப்பட வேண்டிய இடங்கள்
பழங்குடியின மக்களை காட்டை விட்டு வெளியேற்ற கார்பரேட் கம்பெனிகள் போடும் திட்டமாக, அவர்களுக்கு தொழில்நுட்ப வசதிகளைக் காட்டி அடிமைப்படுத்துவது, பண ஆசை காட்டுவது, பழங்குடியின இளைஞர்களுக்கு மதுபானங்களைக் கொடுத்துப் பழக்குவது போன்றவற்றை வெளிப்படையாகக் காட்டிய விதத்திற்குப் பாராட்டுகள்.
எஸ்.ஆர்.சதீஸ்குமாரின் ஒளிப்பதிவில் பளீச்செனத் தெரியும் காடுகள், பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் போன்றவை அழகு. அதேநேரத்தில், அவை அழிக்கப்பட்ட பின்னர் அங்கு கார்பரேட் நிறுவனத்தின் பணிகள் நடக்கும் போது காட்சிப் படுத்தியிருப்பது மிகவும் அருமை.
யுவன் சங்கராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தைத் தாங்கிப் பிடிப்பதற்கு உதவி செய்திருக்கின்றன.
மொத்தத்தில், ‘கடம்பன்’ – காடுகள் அழிக்கப்படுவதும், அங்கிருந்து வெளியேறாத பழங்குடியின மக்கள் மறைமுகமாகக் கொல்லப்படுவது என்ற நிதர்சனமான உண்மையைச் சொல்லும் ஒரு கதைக்கு எதுக்கு இந்த சினிமாத்தனமும்? சிக்ஸ்பேக் ஆர்யாவின் ஹீரோயிசமும்?
சொல்ல வந்த கருத்தை ஆழமாக எடுத்துச் சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தாலே, இப்படம் மக்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக, காடுகள் சார்ந்த விசயங்களுக்கு எடுத்துக்காட்டான படமாக இருந்திருக்கும்.
ஆக, இது தேவையான கதை ஆனால் சொல்லிய விதத்தில் ஈர்க்கவில்லை!
-ஃபீனிக்ஸ்தாசன்