சியோல் – நேற்று ஞாயிற்றுக்கிழமை வடகொரியா நடத்திய அணு ஆயுதச் சோதனை தோல்வியடைந்திருப்பதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் கூறுகின்றன.
வடகொரியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த துறைமுக நகரமான சின்போவில், இந்த அணு ஆயுதச் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதே இடத்தில் தான் இம்மாதத் தொடக்கத்தில், தொலைதூர ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டு அவை, ஜப்பான் கடலில் விழுந்ததாகவும் தென்கொரிய தற்காப்பு அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
துறைமுக நகரான சின்பாவை, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து செயற்கைக்கோள் உதவியுடன் அமெரிக்கா கண்காணித்து வருகின்றது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, எந்த வகையான ஏவுகணை பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது என்பதை அறிய அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கியிருக்கின்றனர்.
அது ஒரு நடுத்தரமான ஏவுகணை என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக வெள்ளை மாளிகையின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் தெரிவித்திருக்கிறார்.