Home Featured தமிழ் நாடு ஓபிஎஸ் – எடப்பாடி – இணைய, தினகரன் ஓரங்கட்டப்படுவாரா?

ஓபிஎஸ் – எடப்பாடி – இணைய, தினகரன் ஓரங்கட்டப்படுவாரா?

892
0
SHARE
Ad

panneer selvam-palanisamyசென்னை – அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் அளவுக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் இடையில் சுமுகமான இணைப்புப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இதன் காரணமாக, டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படுவார் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக நாளை திங்கட்கிழமை பெங்களூரு சென்று சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்துத் தனது அடுத்த கட்ட அரசியல் வியூகங்களை தினகரன் வகுக்க இருப்பதாகவும், தமிழக ஏடுகள் தெரிவித்திருக்கின்றன.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரச்சாரங்களும், அதில் இருந்து கிடைத்த பாடங்களும், படிப்பினைகளும், மூன்று தரப்புகளுக்கும் – அதாவது ஓபிஎஸ், எடப்பாடி, தினகரன் என மூன்று தரப்புகளுக்கும் – மனமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. நாம் அடித்துக் கொண்டால், திமுகதான் வலிமை அடையும் – அடுத்த ஆட்சியையும் அமைக்கும் என்ற நிலைமையை உணர்ந்துள்ள மூன்று தரப்புகளும் அந்நிலைமை ஏற்படாமல் தடுக்க என்ன செய்வது எனத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

டிடிவி தினகரனை பொதுச் செயலாளராக வைத்துக் கொண்டும், சசிகலாவைச் சிறையில் வைத்துக் கொண்டும், இனியும், அதிமுகவை மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற வைப்பது சிரமமான காரியம் என்பதை உணர்ந்து கொண்டிருக்கும் அதிமுக தரப்புகள், தினகரனை அரசியல் களத்தில் இருந்து ஒதுக்கி விட்டால், அதன்பிறகு ஓபிஎஸ்-எடப்பாடி இரு தரப்பும் இணைந்தால், அதிமுக மீண்டும் பலம் பெற்று விடும் என்ற கணக்குப் போட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதும், அதற்கான காரணங்களும் கூட, அனைத்து அதிமுக பிரமுகர்களின் கண்களைத் திறந்திருக்கின்றன.

ஒரே பிரச்சனை அடுத்த முதல்வர் யார் என்பதுதான்!

ஓபிஎஸ், எடப்பாடி இருவரில் ஒருவர் முதல்வராகவும், மற்றொருவர் துணை முதல்வராகவும் இணைந்தால், கட்சி அடிமட்ட உறுப்பினர்களும் பெரும்பான்மை அளவில் இணைந்து விடுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், அதற்கேற்ப பேச்சு வார்த்தைகளும் இரு தரப்புகளுக்கும் இடையில் நடந்து வருகின்றன என்கின்றன தமிழக அரசியல் வட்டாரங்கள்.

ஒருவர் முதல்வர், இன்னொருவர் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையிலும் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

-செல்லியல் தொகுப்பு