கோலாலம்பூர் – இந்தியாவால் தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கும் நிலையில், நிரந்தர வசிப்பிட அனுமதி குறித்து வழக்கறிஞர்கள் சிலர் கருத்துக் கூறியிருக்கின்றனர்.
உள்துறை அமைச்சால், தனது விருப்பத்தின் பேரில் குடிநுழைவு இலாகா மூலம் மலேசியாவில் ஒருவருக்கு நிரந்தர வசிப்பிட அனுமதி வழங்க முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறுவதாக மலேசியாகினி தெரிவிக்கின்றது.
குடிநுழைவுச் சட்டத்தின், பிரிவு 10-கீழ் வழங்கப்படும் இந்த குறிப்பிட்ட நுழைவு அனுமதி பெற்ற ஒருவர், தேசியப் பதிவு இலாகாவிடம் அதனை அறிவித்து நிரந்தர வசிப்பிட அனுமதிக்கான சிவப்பு அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இவை பெரும்பாலும் விருப்பத்தின் பேரில் தான் வழங்கப்படுகின்றன என்று வழக்கறிஞர் லத்தீபா கோயா உட்பட பலர் ஒப்புக் கொள்கின்றனர்.
நிரந்தர வசிப்பிட அந்தஸ்து பெற சில விதிமுறைகள் இருந்தாலும் கூட, உள்துறை அமைச்சு தான் அதனை வழங்குகிறது என்றும் லத்தீபா கூறுகின்றார்.
எனவே, உள்துறை அமைச்சு நினைத்தால் அதனை யாருக்கு வேண்டுமானாலும் வழங்க முடியும் என்றும் லத்தீபா சுட்டிக் காட்டுகின்றார்.
குடிநுழைவு இலாகாவின் இணையதளத்தில், முதலீட்டாளர்கள், நிபுணர்கள், மலேசியர்களைத் திருமணம் செய்தவர்கள் மற்றும் மலேசியப் பிரஜையின் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு புள்ளிகளின் அடிப்படையில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்படுகின்றது.
குடிநுழைவு இலாகாவின் இயக்குநர் ஒரு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து விண்ணப்பத்தை நிராகரித்தாலும் கூட, தனிநபர் அதனை உள்துறை அமைச்சிடம் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் முடியும் என்றும் உள்துறை அமைச்சின் இணையதளம் கூறுகின்றது.
ஜாகிர் நாயக்கிற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டதாக துணைப் பிரதமர் சாஹிட் ஹமீடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.