கோலாலம்பூர் – 239 பேருடன் எம்எச்370 விமானம் மாயமாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம், அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, புதிய செயற்கைக்கோள் முறையின் மூலம், தங்களது விமானங்களை நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கவிருக்கிறது.
இந்தப் புதிய விண்வெளி சார்ந்த கண்காணிப்பு முறை, வரும் 2018-ம் ஆண்டு முதல் இயக்கத்திற்கு வரவிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏரியான் என்ற நிறுவனம் இந்த முறையை உருவாக்கியிருக்கிறது. அந்நிறுவனத்துடன் மலேசியா ஏர்லைன்ஸ் புதிய ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இதன் மூலம் விமானம் கடல் பகுதியின் மேலோ அல்லது தீவுப்பகுதிகளின் மேலோ பறக்கும் போது கூட, எந்த நேரத்திலும் அதனைக் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.
“நிகழ் நேரத்தில், உலகளாவிய விமான கண்காணிப்பு மூலம், கோளின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் மலேசியா ஏர்லைன்சை கண்காணித்து அதன் பாதுகாப்பு இலக்குகளை அதிகரிக்க முடியும்” என்று ஏரியான் தலைமைச் செயலதிகாரி டான் தோமா கூறியிருக்கிறார்.