![](https://selliyal.com/wp-content/uploads/2025/02/Sevan-Doraisamy-12022025-e1739414127558.jpg)
புத்ராஜெயா: சுவாராம் (Suara Rakyat Malaysia) என்னும் மனித உரிமைகளுக்கான போராட்ட இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி கைது செய்யப்படவில்லை என்றும் மாறாக வாக்குமூலம் பெறுவதற்காக மட்டுமே காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 10) உள்துறை அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற மகஜர் ஒன்றைச் சமர்ப்பிக்கும் சம்பவம் தொடர்பில் எந்த கைதும் நடைபெறவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் சட்டம் 1959 இன் கீழ் பாதுகாப்பு நடைமுறை அறிக்கையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்கள் காவல்துறைக்கு வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டனர் என்றும் அது மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் பல பங்கேற்பாளர்கள் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தனது செய்தியறிக்கையில் விளக்கியுள்ளது. எந்த கைதும் நடைபெறவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, சிவன் துரைசாமி மற்றும் சுவாரம் நிர்வாகி அஸ்ரா நஸ்ரோன் ஆகியோர் சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 கைதிகளின் குடும்பத்தினருடன் உள்துறை அமைச்சக பிரதிநிதிகளை சந்திக்க விரும்பினர். முறையான அனுமதி சீட்டு (பாஸ்) பெறாமல் அவர்கள் அங்கு சென்றனர். சிறையில் இருக்கும் கைதிகள் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
சுவாரம், புத்ராஜெய மாவட்ட காவல்துறை தலைமையக அதிகாரிகள் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 12) மதியம் தனது அலுவலகத்திற்கு வந்ததாகக் கூறியது. காவல்துறை முதலில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 111வது பிரிவின் கீழ் சிவன் மற்றும் அஸ்ராவுக்கு ஒரு நோட்டீஸை வழங்க விரும்புவதாகக் கூறியது. ஆனால் அதற்கு பதிலாக அவர்களை கைது செய்ய விரும்புவதாகப் பின்னர் தெரிவித்தது.
இருப்பினும், அஸ்ரா மருத்துவ விடுப்பில் இருந்ததால் அவர் காவல் நிலயத்திற்கு செல்லவில்லை. சிவன் மட்டுமே புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி அய்டி ஷாம் முகமட் சிவன் கைது செய்யப்பட்டதை மறுத்து, தாங்கள் சிவனின் வாக்குமூலத்தை மட்டுமே பதிவு செய்ததாகக் கூறினார்.
இதற்கிடையில் சிவன் தன்னைக் கைது செய்த அதிகாரி தான் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியதாகக் கூறினார்.
“முதலில், அதிகாரி எனது வாக்குமூலத்தை எடுக்க விரும்புவதாகக் கூறினார், ஆனால் அதை மற்றொரு நாளில் செய்ய முடியுமா என்று நான் கேட்டபோது, அதிகாரி முடியாது என்று கூறினார். நான் கைது செய்யப்படுகிறேனா என்று கேட்டபோது, அவர் ஆம் என்று கூறினார். நான் ஒரு காவல்துறை வாகனத்தில் புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்” என்று சிவன் தெரிவித்ததாக மலேசியாகினி குறிப்பிட்டது.
சிவனின் கைதை பல அரசு சார்பற்ற அமைப்புகளும் மனித உரிமைப் போராட்ட அமைப்புகளும் கண்டித்துள்ளன.