Home நாடு ரபிசி ரம்லி காவல் துறையில் புகார் செய்வார் – 54 ஆயிரம் சீனக் குடிமக்களுக்கு குடியுரிமையா?

ரபிசி ரம்லி காவல் துறையில் புகார் செய்வார் – 54 ஆயிரம் சீனக் குடிமக்களுக்கு குடியுரிமையா?

365
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: 54,000 சீனாவின் குடிமக்களுக்கு  மலேசியக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக பாஸ் சமூக ஊடகப் பதிவு செய்ததற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

“நான் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோனுடன் பேசியிருக்கிறேன். இதன் மூலம் இந்த பதிவுக்கு எதிராக போலீஸ் புகாரை பதிவு செய்யலாம். ஏனெனில் இந்த சீன குடிமக்கள் குடியுரிமை பெறும் நிலையில் இருப்பதாக கூறுவது குற்றவியல் அவதூறு – பொய் பிரச்சாரமாகும். இதுபோன்ற பொய்களை உமிழ்வதற்கு பாஸ் பொறுப்பேற்க வேண்டும்,” என்று அவர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 28) ஒரு டுவிட்டர் பதிவில் கூறினார்.

பாஸ் கட்சியின் சமூக ஊடகப் பதிவில், 54,000 சீனாவின் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்கியதற்காக சைபுடின் நசுத்தியோன், தேசியப் பதிவுத் துறை (NRD) ஆகிய தரப்புகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரிக்க வேண்டும் என்று பெர்சாத்து தகவல் தலைவர் டத்தோ ரசாலி இட்ரிஸ் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது.

#TamilSchoolmychoice

“54,000 என்பது மிக அதிகமான எண்ணிக்கையாகும், மேலும் இந்த சிக்கலை விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாள வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள். மலேசிய குடிமக்களாகிய நமது சிறப்பு உரிமைகளுடன் நமது தேசிய இறையாண்மையும் பாதுகாக்கப்பட வேண்டும்!” எனவும் ரபிஸி ரம்லி கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 18 அன்று, தேசியப் பதிவகமும்  இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.

2017 மற்றும் 2022 க்கு இடையில் குடியுரிமைக்கான 54,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் விண்ணப்பங்கள் கூட்டாட்சி அரசியலமைப்பில் உள்ள விதிகளின்படி செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பிற நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை உள்ளடக்கியது.

இந்த ஆண்டு ஜூலை 31 வரை, 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய பதிவகத்தின் அடிப்படையில் சீனாவைச் சேர்ந்த 45 நபர்களுக்கு மட்டுமே மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டது என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.