ஜார்ஜ் டவுன் – பினாங்கில் கார் விற்பனையாளர் ஒருவர் மர்மமான முறையில், அடுக்குமாடிக் குடியிருப்பின் 13-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
எனினும், இச்சம்பவத்தில் அவர் சிறு காயங்களுடன் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார்.
ஜாலான் தஞ்சோங் தோக்கோங் என்ற இடத்தில் அமைந்திருக்கும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் தனது உறவினரைப் பார்க்க கடந்த ஏப்ரல் 15-ம் தேதி, அங்கு சென்ற 23 வயதான அந்த இளைஞர், திடீரென அக்கட்டிடத்தின் 13-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
கார் நிறுத்துமிடத்தின் தகரக் கொட்டகையின் மேல் அவர் விழுந்ததில் அவருக்கு கையிலும், முதுகிலும் சிறு சிராய்ப்புக் காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.
இந்நிலையில், பயங்கரச் சத்தம் கேட்டு அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பாதுகாவலர்கள் ஓடி வந்து பார்த்த போது, சரிந்து விழுந்திருந்த கொட்டகையின் மேல் அந்நபர் அமர்ந்த நிலையில் காணப்பட்டிருக்கிறார்.
எப்படி விழுந்தாய்? எனப் பாதுகாவலர்கள் கேட்ட போது, தான் எப்படி விழுந்தேன் என்று தனக்குத் தெரியவில்லை என்று அந்நபர் பதிலளித்திருக்கிறார்.
இந்நிலையில், அந்நபரின் குடும்பத்தினர் வந்து அவரை அழைத்துக் கொண்டு மருந்தகம் சென்றதோடு, சேதமடைந்த தகரக் கொட்டகையையும் சரி செய்து தருவதாகக் கூறியிருக்கின்றனர்.