கோலாலம்பூர் – மலேசியக் கலைத்துறையில் வளர்ந்து வரும் பெண் இயக்குநர்களில், புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் வதனி குணசேகரன்.
கடந்த ஆண்டு வதனி இயக்கத்தில் உருவான, ‘அன்பே ஆருயிரே’ என்ற தனி காணொளிப் பாடல், மலேசிய இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றதோடு, தமிழ்நாட்டில் ராஜ்டிவி உட்பட முன்னணி தொலைக்காட்சிகளில் அப்பாடல் ஒளிபரப்பப்பட்டது. யூடியூப்பில் இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் அப்பாடலைப் பார்வையிட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், வதனி குணசேகரன் தற்போது, ‘குறுஞ்செயலி’ என்ற புதிய குறும்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் எந்த வகையில் நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து நமது தனிப்பட்ட இரகசியங்களைப் பாதுகாத்து வருகின்றது என்பதை திகிலும், விறுவிறுப்பும் நிறைந்த குறும்படமாக இயக்கியிருக்கிறார்.
இன்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில், கோலாலம்பூர் ஜிஎஸ்சி பெவிலியனில் இக்குறும்படம் மலேசியக் கலைஞர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் சிறப்புக் காட்சியாக ஒளிபரப்பப்படவிருப்பதோடு, விரைவில் அதிகாரப்பூர்வமாக யூடியூபில் வெளியாகவிருக்கிறது.
குறுஞ்செயலி குறும்பட அனுபவம் வதனி கூறுகையில், “குறுஞ்செயலி என்ற தலைப்பு ஏன் வைத்தோம் என்றால், இந்தக் கதை மொபைல் அப்பிளிகேஷன் தொடர்பானது. எனவே அதற்குத் தமிழில் பெயர் தேடிய போது, ‘குறுஞ்செயலி’ என்று அறிந்து கொண்டோம். இந்தப் பெயர் பற்றி நாங்கள் சிலரிடம் கூறும் போதெல்லாம் அதைப் பற்றித் தெரியாத அவர்கள் அப்படி என்றால் என்ன? என்று ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தார்கள். பெரும்பாலானவர்களுக்கு கேள்வியாகவே இருக்கும் இந்தத் தலைப்பையே வைத்து மக்களின் ஆர்வத்தைத் தூண்டலாம் என்ற முடிவுக்கு வந்த பின்னர் ‘குறுஞ்செயலி’ என்றே பெயர் வைத்தோம்.இந்தப் படத்திற்கு எனக்கு முதுகெலும்பாக இருந்தவர் ஜாலி. அவர் தான் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலரிங், பாடல் ஆகியவற்றை உருவாக்கியவர். எச்கே நெட்வர்க் தான் இதனைத் தயாரித்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், கதை பற்றி வதனி கூறுகையில், இன்றைய காலத்தில் இந்தக் கதை பலருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். இப்படம் பார்த்த பிறகு எல்லோரும் தங்களது போன் பத்திரமாக இருக்கிறதா? என்று ஒருமுறை சோதனை செய்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
கதிர் கிராங்கி, நிவாசன் கணேசன், கீதா தேவி, மோகன் சந்திர தாஸ், ஸ்ரீகுமரன் முனுசாமி, ரிக்னவீன் மணியரசு, குமரேஷ் இளங்கோ, விஜய் மனோகரன், குமுதவாணி குமாரவேலு, லில்லி ரூபினி லசாருஸ், தீபன் எனப் பலர் இக்குறும்படத்தில் நடித்திருக்கின்றனர்.
கடந்த வாரம் இக்குறும்படத்தில் இடம்பெற்ற ‘குறுஞ்செயலி’ என்ற பாடல் யூடியூபில் வெளியானது. ஜாலி இசையமைத்திருக்கும் அப்பாடலுக்கு விகடகவி மகேன், மணி வில்லன்ஸ், பவித்ரா நாகரத்னம், ட்ரூப் சேங்கெட், ஹார்டிபி, ரூபன் டி பிளாக், ரகுவரன், கதிர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர். மணி வில்லன்ஸ், ஃபீனிக்ஸ்தாசன் வரிகள் எழுதியிருக்கின்றனர்.
அப்பாடலை, இந்த இணைப்பின் வழியாகக் காணலாம்:-
-செல்லியல் தொகுப்பு