கோலாலம்பூர் – “ராஜா போமோ செதுனியா” இப்ராகிம் மட் ஜின்னை ஜோகூர் மாநிலம் செகாமட்டில் நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.
செகாமட்டில் ஒரு தங்கும்விடுதியில் வைத்து அதிகாலை 2.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக மலாய் நாளேடு ஒன்று கூறுகின்றது.
இஸ்லாமை அவமதித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டதாக பிரதமர் துறையைச் சேர்ந்த துணையமைச்சர் டத்தோ டாக்டர் அஷ்ரப் வாஜிடி டுசுக்கி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
‘டத்தோ மகாகுரு’ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ராஜா போமோ இப்ராகிம் மாட் ஜின், வித்தியாசமான சடங்குகளை நடத்தி அடிக்கடி ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பார்.
எம்எச்370 விமானம் மாயமான போது கோலாலம்பூர் விமான நிலையத்திற்கே சென்று தனது சகாக்களுடன் சடங்குகளை நடத்தினார். அண்மையில் வடகொரியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையில் தூதரக உறவில் விரிசல் ஏற்பட்ட போது அதற்கென்று பிரத்தியேக சடங்கு ஒன்றைச் செய்து தான் வடகொரியாவை வசியப்படுத்தப் போவதாக ராஜா போமோ ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, ‘தி சண்டே டைம்ஸ்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த 70 ஆண்டுகளாக மலேசியாவை தான் பாதுகாத்து வருவதாகவும், சுதந்திரத்திற்கு முன்பே அதனை தான் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.