கோலாலம்பூர் – வடகொரியா தாக்குதல் நடத்துவதில் இருந்து மலேசியாவைப் பாதுகாக்க மாந்திரீகச் சடங்குகளைச் செய்த ராஜா போமோ இப்ராகிம் மாட் சின்னை, விரைவில் காவல்துறை விசாரணை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் வெளியிட்டிருக்கும் தகவலில், ராஜா போமோவின் செயல்பாடுகள் குறித்து கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய இலாகா, எங்களிடம் புகார் அளித்தால், நாங்கள் அவரைக் கைது செய்து விசாரணை செய்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.
வடகொரியாவின் பிடியில் இருக்கும் மலேசியர்களை மீட்கவும், துர்சக்திகளிடமிருந்து மலேசியாவைப் பாதுகாக்கவும் ராஜா போமோ, தனது சகாக்களுடன் சேர்ந்து கடற்கரையில் மாந்திரீகச் சடங்குகளை நடத்தும் காணொளி ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது.
‘டத்தோ மகாகுரு’ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ராஜா போமோ இப்ராகிம் மாட் ஜின், அண்மையில், தனது மூன்று உதவியாளர்களுடன், கடற்கரை ஒன்றில் தனது பிரத்தியேகப் பொருட்களான இரண்டு இளநீர், தூரநோக்கியாகப் பயன்படுத்த இரண்டு மூங்கில் குச்சிகள், பாய் விரிப்பு ஆகியவற்றுடன் சடங்குகளில் ஈடுபட்டார்.
18 வினாடிகள் ஓடக்கூடிய அந்தக் காணொளியை வெளியிட்டவர் யார்? என்பது தெரியாத நிலையில், இணையத்தில் அக்காணொளி மலேசியர்கள் பலராலும் பகிரப்பட்டது.
இச்சடங்கு நடத்தப்படுவதன் காரணம், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மனதை இளக வைத்து, அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மலேசியர்களை விடுவிப்பதற்காக என்று அக்காணொளியை வெளியிட்டவர் குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ‘தி சண்டே டைம்ஸ்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், கடந்த 70 ஆண்டுகளாக மலேசியாவை தான் பாதுகாத்து வருவதாகவும், சுதந்திரத்திற்கு முன்பே அதனை தான் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.