கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல முகங்கள், வானொலியில் தினமும் கேட்டு ரசிக்கும் குரல்கள், தன்னம்பிக்கையை அளிக்கும் தலைப்பு, சிங்கப்பூர், மலேசியா என இருநாட்டு இயக்குநர்களின் கைவண்ணத்தில் திகிலும், சுவாரசியமும் நிறைந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை, தனது முதல் தொலைக்காட்சிப் பாடலிலேயே அனைவரையும் கவர்ந்திழுத்த இளம் இசையமைப்பாளரின் இசை. இதை விட வேறு என்ன வேண்டும்? ஒரு திரைப்படம் மக்களை மகிழ்ச்சிப்படுத்த?
ஆம்.. மேலே கூறப்பட்ட அத்தனை சிறப்பம்சங்களையும் கொண்ட ஒரு திரைப்படம் தான் ‘அச்சம் தவிர்’.
டிஎச்ஆர் வானொலியைச் சேர்ந்த உதயா, ஆனந்தா, கீதா, ரேவதி ஆகியோரோடு, நடிகர் கானா, விகடகவி மகேன், பாடகர் ரேபிட் மேக், ஆல்வின் மார்டின் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை சிங்கப்பூர் இயக்குநர் எஸ்.எஸ்.விக்னேஸ்வரன் சுப்ரமணியம், மலேசிய இயக்குநர் கார்த்திக் ஷாமலனும் இணைந்து இயக்கியிருக்கின்றனர். வர்மன் இளங்கோவன் இசையமைத்திருக்கிறார்.
முதற்கட்டமாக சிங்கப்பூரில் இத்திரைப்படத்தின் அறிமுக விழா, ஆடல், பாடலுடன் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து வரும் மே 6-ம் தேதி, இரவு 8 மணியளவில் கோலாலம்பூர் மிட்வேலி எக்சிபிசன் செண்டரில், அஜண்டா சூர்யா கம்யூனிகேஷன் மற்றும் இந்தியன் வெடிங் ஃபேர் ஏற்பாட்டில் அதன் முதல் முன்னோட்டக் காட்சி (Official Teaser), பாடல் விளம்பரம் ஆகியவை வெளியிடப்படவிருக்கின்றன.
முதல் பார்வை
ஹாலிவுட் திரைப்படங்களில் இருந்து மெல்ல தமிழ்த் திரைப்படங்களுக்கும் வந்த ஒரு பாணி தான் முதல் பார்வை போஸ்டரிலேயே திரைப்படம் பற்றிய சில சுவாரிசியமானத் தகவல்களை மறைமுகமாக அதில் சொல்வது. இதனை இந்தியாவில் இப்போது பல முன்னணி இயக்குநர்களும் பின்பற்றி வருகின்றனர். மக்களின் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக அவை வைக்கப்படுகின்றன.
அந்த வகையில், ‘அச்சம் தவிர்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரிலும் கதை பற்றிய சில சுவாரசியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதனை வெறும் போஸ்டராக மட்டும் பார்த்தவர்களுக்கு இவர்களெல்லாம் நடித்திருக்கிறார்கள் என்று தான் தோன்றும். ஆனால் அதே போஸ்டரை சற்று நுணுக்கமாகப் பார்த்தவர்களுக்கு அதில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்கள் புரியும். இது ஒருவகை சுவாரசிய புதிர் விளையாட்டு தான்.
சரி.. அந்த வகையில் ‘அச்சம் தவிர்’ திரைப்படத்தின் போஸ்டரில் சொல்லப்பட்டிருக்கும் சுவாரசியங்களைப் பட்டியலிடுவோம்:
1. முக்கிய அங்கமாக லோரி இடம்பெற்றிருக்கிறது. தலைப்பிலும், போஸ்டரின் மேல்பக்கத்தின் வலது மூலையிலும் இருக்கிறது. அதில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறார்.
2. சிவப்பு நிற மெர்செடிஸ் கார் ஒன்று விளக்கு எரிந்த நிலையில் இருக்கிறது. அதே போல் மர வீடு ஒன்றிலும் விளக்கு எரிகிறது. அதில் ஒரு பெண் உருவத்தின் நிழல் தெரிகிறது. மாலை நேரத்தைக் குறிக்க சூரியன் மறைவது காட்டப்பட்டிருக்கிறது.
3. இரவில் காட்டுக்குள் ஒரு மலைப்பாம்பு.
4. நடிகர் கானா போஸ்டரில் இரண்டு இடங்களில் இருக்கிறார். ஒன்று 8 பேரை வழிநடத்திச் செல்வது போலவும், போஸ்டரின் மேல் இடது பக்கத்தில் பயந்த முகத்துடன் இருக்கிறார்.
5. புன்னகைப்பூ கீதா இரவு நேரத்தில் யாரையோ தேடிச் செல்கிறார்.
6. தலைப்பில் சிவப்பு நிற லோரிக்குக் கீழே 8 பேர் தப்பி ஓடுகிறார்கள்.
மேலும், பாழடைந்த கட்டிடம், மரத்தின் வேர், லோரியின் பக்கவாட்டு கண்ணாடி என இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு போஸ்டரையே இவ்வளவு நுணுக்கமாக வெளியிட்டிருக்கும் இப்படக்குழு நிச்சயமாக திரைப்படத்தில் எவ்வளவு சுவாரசியங்களைச் சேர்த்திருப்பார்கள் என்பதை சொல்லவா வேண்டும்?, விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் குறித்த மேல் விவரங்களை https://www.facebook.com/atchamthavirt/?hc_ref=SEARCH என்ற பேஸ்புக் பக்கத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
-ஃபீனிக்ஸ்தாசன்