புதுடில்லி – மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான ஆனந்த கிருஷ்ணனின் இந்திய முதலீடுகள் மீதான சட்டச் சிக்கல்கள் இன்னும் தொடர்கின்றன.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவர் அண்மையில் சிறப்பு நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரித்து வந்த புதுடில்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரின் மீதான குற்றச்சாட்டுகளையும் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தள்ளுபடி செய்து அதிரடித் தீர்ப்பை வழங்கியிருந்தது.
இதனால் கலாநிதி மற்றும் தயாநிதி மாறன் சகோதரர்களும் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணனைச் சூழ்ந்திருந்த சட்ட சிக்கல்கள் தீர்ந்து விட்டன எனக் கருதப்பட்ட வேளையில், தற்போது இந்திய அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பில் மேல் முறையீடு செய்திருப்பதாக இந்திய ஊடகங்கள் இன்று செவ்வாய்க்கிழமை தகவல்கள் வெளியிட்டிருக்கின்றன.