பெட்டாலிங் ஜெயா – நாளை வெள்ளிக்கிழமை மே 5-ஆம் தேதி, இரவு 8.00 மணி முதல் 10.00 மணிவரை, தமிழகத் தலைநகர் சென்னையில் இயங்கி வரும் பிரபல பஜனை இசைக்குழுவான “நவகான பஜனை மண்டலி” குழுவினரின் இலவச இசை நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயா, தோட்ட மாளிகையில் நடைபெறுகின்றது.
மாணவர்களும், பக்தர்களும், இந்து அமைப்பினரும், பொதுமக்களும் பயன்பெறும் வண்ணம் இலவசமாகவே நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து சிறந்த பஜனை இசைகளைக் கேட்டு இன்புறுமாறு ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றனர்.
“நவகான பஜனை மண்டலி” குழுவினரின் சிறப்புகள்
‘எந்தரோ மகானுபாவுலு’ என்ற கீர்த்தனையாக இருந்தாலும், மகாகவி பாரதியின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலாக இருந்தாலும், டி.எம்.சௌந்தரராஜனின் ‘உள்ளம் உருகுதையா’ பாடலாக இருந்தாலும், பக்திப் பாடல்கள் மற்றும் இசை மூலம் மனதும் செயலும் ஒருமித்து பயணிக்கும் இனிய அனுபவம் அனைவருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் வாய்த்திருக்கும்.
இந்த இசைப் பயணத்தில் தங்களையும் அர்ப்பணித்துக் கொள்ள, சென்னையில், “நவகான பஜனை மண்டலி” எனும் அமைப்பு 2011-ஆம் வருடம் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோரைக் கொண்டு திருமதி வீணா ராஜேஷ் அவர்களால் தொடங்கப்பட்டது. இசைப் பாடல்கள் மூலம் பக்தி மற்றும் இறை வழிபாட்டைப் பரப்புவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும்.
சங்கீதப் பாடல்களை முறைப்படுத்தி, வகைப்படுத்திய புரந்தர தாசர் இயற்றிய பாடல்கள், சங்கீத மும்மூர்த்திகள் பாடல்கள் மற்றும் பற்பல இசை சக்கரவர்த்திகளின் பக்திப் பாடல்கள் என அனைவரும் விரும்பும் வகையில் தங்களது இசைப் பயணத்தை இந்த “நவகான பஜனை மண்டலி” தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த இசைப்பயணத்தின் குறிப்பிடத்தக்க சில மைல் கற்கள்:-
- நவம்பர் 2011-ஆம்ஆண்டு திருச்சானுர் பிரம்மோற்சவத்தில் பத்மாவதி தாயாரின் ஆசியோடு இசைப் பயணம் தொடங்கியது.
- திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளின் பிரம்மோற்சவத்தில் 2012-2016 வரை பங்கேற்றது. ஒவ்வொரு வருடமும் திருப்பதி பிரம்மோற்சவத்தில் கருட சேவையின்போது, இசை நிகழ்ச்சி நடத்த இந்த இசைக் குழுவுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
- 2012-ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தில் நாத நீராஞ்சனாத்தில் பங்கேற்றது.
- தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியில் கடந்த வருடம் 25 டிசம்பர் 2016-இல் நவகான பஜனை மண்டலியின் நிகழ்ச்சி நடைபெற்று அனைவரின் ஏகோபித்த ஆதரவையும், பாராட்டையும் பெற்றது.
- ஸ்ரீஸ்ரீ விச்வேஷ தீர்த்த சுவாமிஜி, பெஜாவர் மடம், உடுப்பி மற்றும் நாம சங்கீர்த்தன புகழ் ஸ்ரீ விட்டல் தாஸ் மகராஜ் ஆகியோரின் பாராட்டையும், அன்பையும் பெற்றது.
- சென்னையில் நடைபெற்ற புரந்தரதாசர் இசை ஆராதனை நிகழ்ச்சியில் ஸ்ரீ வித்யா பூஷணா அவர்கள் தலைமையில் பாம்பே சகோதரிகள் திருமதி சரோஜா மற்றும் திருமதி லலிதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து அவர்களின் பாராட்டுகளையும் பெற்றனர்.
- கிரி பைன் ஆர்ட்ஸ் ஆண்டுதோறும் சென்னையில் நடத்தும் சந்நிதியில் சங்கீதம் நிகழ்ச்சியில் ஆண்டு தோறும் பங்கேற்கின்றனர்.
- திருவாட்டி அமரர் சௌந்திரா கைலாசம் அவர்களின் நினைவாக வருடம்தோறும் மெட்ராஸ் சேவா சதன் நடத்தும் கலைவிழாவில் பங்கேற்பு.
- மே 2016-இல் மலேசியாவில் மலாக்கா மற்றும் பினாங்கு நகரங்களில் ஏற்கனவே இன்னிசைக் கச்சேரி.
- 14 ஏப்ரல் 2017ஆம் நாள் துபாயிலுள்ள இந்தியத் தூதரகத்திலும், 15 ஏப்ரல் 2017-ஆம் நாள் அபு தாபியிலும் நடைபெற்ற இன்னிசைக் நிகழ்ச்சியில் பங்கேற்பு.
- இந்த பஜனைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி எதிர்வரும் மே 18-ஆம் தேதி இலங்கையின் நுவரெலியாவிலும், மே 19-ஆம் தேதி யாழ்ப்பாணத்திலும், மே 21-ஆம் தேதி கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெறுகின்றது.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த “நவகான பஜனை மண்டலி” பஜனைக் குழுவினரின் இலவச இன்னிசைக் கச்சேரியில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.