Home Featured நாடு 7 வயது சிறுமி பார்கவியின் ‘தங்க கிளி – மாய தேநீர் பாத்திரம்’ நூல் வெளியீடு!

7 வயது சிறுமி பார்கவியின் ‘தங்க கிளி – மாய தேநீர் பாத்திரம்’ நூல் வெளியீடு!

1239
0
SHARE
Ad

Persamaகோலாலம்பூர்- 7 வயதே ஆன சிறுமி மதுபார்கவி விஜயகுமார் எழுதிய, ‘தங்க கிளியும் மாய தேநீர் பாத்திரமும்’ என்ற குழந்தைகளுக்கான சிறுகதை நூல், பெர்சாமா ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மியூசியம் நெகாரா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மது பார்கவி விஜயகுமார் ஒரு சிறப்புக் குழந்தை ஆவார். அவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், பார்கவியின் பெற்றோர் அளித்த பயிற்சியும், ஊக்கமும் அவரை சொந்தமாக கதைகள் எழுதி அதை நூலாக வெளியிடும் அளவிற்குக் கொண்டு வந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

நூல் வெளியீடு அன்று அரங்கம் முழுவதும் மக்கள் வெள்ளம் நிறைந்து காணப்பட்டது.பெர்சாமா அமைப்பின் தலைவரும், பிரபல பாடகியுமான திலா லக்‌ஷ்மண் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் பெர்சாமா அமைப்பைச் சேர்ந்த பெற்றோர், மலேசியக் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு பிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தலைமை வகித்தார்.

ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்த ‘ரேதா’ என்ற பல விருதுகள் பெற்ற திரைப்படத்தை இயக்கிய துங்கு மோனா ரிசா இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் பார்கவியைப் பார்க்க ஆவலோடு காத்திருக்க, அன்னை ஜெகதீஸ்வரி கிருஷ்ணனின் அரவணைப்போடு, தயங்கியபடியே தனது புத்தகத்தால் முகத்தை மூடிக் கொண்டு மேடைக்கு வந்தார் பார்கவி. தான் எழுதிய இரு கதைகளை மக்கள் முன்னிலையில் அவரே வாசித்துக் காண்பித்த போது அரங்கில் இருந்த அனைவருமே நெகிழ்ச்சியில் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

அதன் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பிய பார்கவி, தனது கையாலேயே நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு புத்தகம் வழங்கினார்.

இந்நிலையில், பார்கவியின் தனிப்பட்ட ஆசிரியர் மகாலட்சுமி தவமணி கூறுகையில், பார்கவி இந்த அளவிற்கு வந்திருப்பதை எண்ணி தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

காரணம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்கவியால் பென்சிலை கையால் பிடிக்க முடியாது என்பதோடு, வாசிக்கவும் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.

ஆனால், மகாலட்சுமி தினமும் அவருக்கு களிமண், மார்பில் குண்டுகள் மற்றும் விளையாட்டு மாவுருண்டை ஆகியவற்றை விளையாடக் கொடுத்து அவரது கையை பலப்படுத்தியிருக்கிறார்.

“இப்போது கூட பார்கவி அந்த அளவிற்கு எழுதுவது கிடையாது. ஆனால் அவருக்கு யாராவது புத்தகம் வாசித்தால் அதைக் கேட்க மிகவும் பிடிக்கும்” என்று மகாலட்சுமி தெரிவித்தார்.

பார்கவியின் தாய் ஜெகதீஸ்வரி பேசுகையில், பார்கவியை அவரது ஆசிரியர் கதை ஒன்றை எழுதி வரும் படி கூறியதாகவும், அதன் படி, பார்கவி இரண்டு கதைகளை சுயமாக யோசித்துத் தன்னிடம் கூறினார் என்றும் தெரிவித்தார்.

எழுதுவது பிடிக்காத பார்கவியை தான் ஊக்கப்படுத்தி இந்த இரண்டு கதைகளையும் எழுத வைத்ததாகவும் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.

28.90 ரிங்கிட் விலையுள்ள பார்கவியின் ‘தங்க கிளி – மாய தேநீர் பாத்திரம்’ என்ற 24 பக்கங்களைக் கொண்ட நூலை, ராக்யாட் மலேசியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்புத்தகத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், அரசு சார்பற்ற ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளான குழந்தைகளை முறையாக வழிநடத்தும் இயக்கமான பெர்சாமாவிற்கு ( ‘Pertubuhan Sayang Autisme Malaysia- PERSAMA) கொடுக்கப்படும் என்று நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

-செல்லியல் தொகுப்பு

படம்: நன்றி ஸ்டார்