Home Featured இந்தியா அர்னாப் கோஸ்வாமியின் புதிய தொலைக்காட்சி ‘ரிபப்ளிக் டிவி’

அர்னாப் கோஸ்வாமியின் புதிய தொலைக்காட்சி ‘ரிபப்ளிக் டிவி’

827
0
SHARE
Ad

arnab_goswami

புதுடில்லி – இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருக்கும் ‘டைம்ஸ் நௌ’ என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகம் அகில இந்திய அளவில் குறுகிய காலகட்டத்தில் புகழ்பெற்றதற்குக் காரணம் அதன் முக்கிய செய்தியாளர்களில் ஒருவரான அர்னாப் கோஸ்வாமி (படம்).

குரலை உயர்த்தி அவர் நடத்திய விவாதங்கள், எத்தகைய அரசியல் பிரபலமாக இருந்தாலும் அஞ்சாமல் அவர்களை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த துணிச்சல், பல உணர்ச்சிகரமான, மக்கள் பேசவேத் தயங்கும் விவகாரங்களை தொலைக்காட்சி விவாதங்களில் கொண்டு வந்து மக்கள் மன்றத்தில் கொண்டு சென்ற இலாவகம் இப்படிப் பல காரணங்களால், தொலைக்காட்சி ஊடகத்தில் புகழின் உச்சிக்கு சென்றார் அவர்.

#TamilSchoolmychoice

ஆனால், ஏறத்தாழ கடந்த ஆறு மாதங்களாக அவர் எந்தத் தொலைக்காட்சியிலும் முகம் காட்டவில்லை. சில சர்ச்சைகளால் டைம்ஸ் நௌ தொலைக்காட்சியிலிருந்து அவர் விலகி விட்டார்.

அவரது விலகலுக்குப் பின்னர் டைம்ஸ் நௌ தொலைக்காட்சியின் ‘டிஆர்பி’ ரேட்டிங் எனப்படும் மக்கள் அந்தக் குறிப்பிட்ட அலைவரிசையைப் பார்க்கும் விகிதமும் பெருமளவில் சரிந்து விட்டது என்கின்றன வணிக வட்டாரங்கள்.

ஆனால், தற்போது சில முதலீட்டாளர்களின் துணையுடன் ‘ரிபப்ளிக் டிவி’ என்ற தொலைக்காட்சி அலைவரிசையை கடந்த மே 6-ஆம் தேதி முதல் அர்னாப் கோஸ்வாமி தொடங்கியுள்ளார்.

இந்தப் புதிய தொலைக்காட்சி நிறுவனத்தின் இணை தோற்றுநராகவும், நிர்வாக இயக்குநராகவும் அர்னாப் திகழ்கின்றார்.

இதன் மூலம் மீண்டும் சர்ச்சைக்குரிய அவரது விவாதங்கள் அவரது ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வலம் வரும் எனவும், போட்டிகளும், சவால்களும் மிகுந்த இந்திய ஊடகத் துறையில் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் இந்தப் புதிய நிறுவனம் வளர்ச்சி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

-செல்லியல் தொகுப்பு