சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நுனிநாக்கு ஆங்கில உச்சரிப்பும், தடுமாற்றமில்லாத சரளமுடன் புரளும் ஆங்கில மொழிச் சொல்லாடலும், அனைவரும் ஏற்கனவே அறிந்ததுதான்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் மாறி, மாறிப் பேசும் ஜெயலலிதாவின் இரட்டை மொழிப் புலமையையும், ஆற்றலையும், இந்தியாவின் பிரபல ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான டைம்ஸ் நௌ (Times Now) தலைமைஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி (படம்) பாராட்டியுள்ளார்.
தமிழகத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்த ஜெயலலிதா உரை
தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த மே 19ஆம் நாள்! டைம்ஸ் நௌ தொலைக்காட்சி அலைவரிசையில் அனைத்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளையும், அதற்குரிய அரசியல் விமர்சனங்களையும், அர்னாப் கோஸ்வாமி, ஒரு அரசியல் பார்வையாளர் குழுவுடன் இணைந்து அலசிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஜெயலலிதா முன்னணி வகிப்பதும், சட்டமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுவிட்டதும் அறிவிக்கப்பட, தொலைக்காட்சியில் தோன்றி நன்றியுரை நிகழ்த்தத் தொடங்கினார் ஜெயலலிதா. அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் அவரது உரையை ஒளிபரப்பத் தொடங்கின.
அர்னாப் கோஸ்வாமியும், பார்வையாளர்களிடம் “அனைவரும் அமைதியாக இருங்கள். இப்போது ஜெயலலிதா பேசப் போகின்றார்” என்றதும், முதலில் ஜெயலலிதாவின் தமிழ் உரை ஒளிபரப்பாகியது. அதன் பின்னர் உடனடியாக ஆங்கிலத்தில் உரையாற்றத் தொடங்கினார் ஜெயலலிதா.
“ஜெயலலிதா தமிழில் பேசும்போது, அவர் என்ன பேசுகிறார் என்பதை எனது நண்பர் ஒருவர் எனக்கு மொழி பெயர்த்துக் கூறிக் கொண்டே வந்தார். அதன் பின்னர் ஜெயலலிதாவின் ஆங்கில உரையையும் நான் கேட்டேன். நான் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். காரணம், அவர் தமிழில் என்ன பேசினாரோ, அதையேதான் அப்படியே ஆங்கிலத்திலும் கூறினார். சொல்ல வருகின்ற கருத்துக்களை இரண்டு மொழிகளிலும் ஒரே மாதிரி பிசகாமல் சொல்வது அவரது இரட்டை மொழிப் புலமையை நிரூபிக்கின்றது.”
எந்த அரசியல்வாதியையும் எளிதில் பாராட்டாத அர்னாப் கோஸ்வாமியே பாராட்டிய ஜெயலலிதாவின் அந்த ஆங்கில உரையின் காணொளியை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-
-இரா.முத்தரசன்