புது டில்லி: நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று காலையில் அர்னாப் கோஸ்வாமியை அவரது வீட்டில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கு பாஜக வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அர்னாப் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணி புரிந்த அன்வய் நாயக் என்பவருக்கு 5.40 கோடி ரூபாய் வழங்கப்படாததால், 2018-ஆம் ஆண்டு அன்வய் நாயக்கும், அவரது தயாரும் தற்கொலை செய்து கொண்டனர்.
இவர்களின் தற்கொலை முடிவிற்கு காரணம் அர்னாப் கோஸ்வாமிதான் என்று அன்வய் நாயக்கின் மனைவி அக்ஷதா காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரித்து முடிக்கப்பட்ட நிலையில், அன்வய் நாயக்கின் மகள் அட்ன்யா கொடுத்த புதிய புகாரின் பேரில் இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. இதற்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.