Home Featured தமிழ் நாடு கர்ணனைத் தேடும் கொல்கத்தா காவல் துறை!

கர்ணனைத் தேடும் கொல்கத்தா காவல் துறை!

1344
0
SHARE
Ad

karnan-judge-

சென்னை – சர்ச்சைக்குரிய கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.எஸ்.கர்ணனை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கைது மேற்கு வங்காள மாநிலத்தின் காவல் துறையினர் சென்னை வந்துள்ளனர்.

இருப்பினும் கர்ணன் எங்கே இருக்கிறார் என்பது தெரியாததால் தமிழக காவல் துறை உதவியுடன் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்ணன் தற்போது தலைமறைவாக இருக்கின்றார்.

#TamilSchoolmychoice

6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கர்ணனின் உத்தரவுகளை இனி ஊடகங்கள் பிரசுரிக்கக் கூடாது என்ற தீர்ப்பையும் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது. இதன் காரணமாக, கர்ணன் எப்போதும் போல் பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து தனது அதிரடி முடிவுகளை கடந்த சில நாட்களாக அறிவிக்கவில்லை.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் கர்ணன் கடைசியாக குடும்பத்தினருடன் தங்கியிருந்ததால், அவரைத் தேடி அங்கு காவல் துறையினர் சென்றனர். இருப்பினும் அவர் அங்கிருந்து குடும்பத்தினருடன் கிளம்பி ஆந்திராவிலுள்ள காளஹஸ்தி ஆலயத்திற்கு சென்று விட்டதாகக் கூறப்பட்டதால், அந்த விருந்தினர் மாளிகையிலேயே முகாமிட்டு கர்ணனுக்காக காவல் துறையினர் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் அவரது செல்பேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கின்றது என்பதால் அவருடன் செல்பேசி வழியும் காவல் துறையினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் இந்திய நீதிபதியாக கர்ணன் திகழ்கின்றார்.

அந்த நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட பல சட்ட வழிமுறைகள் இருந்தாலும், கர்ணன் இன்னும் எந்தவித பதில் நடவடிக்கையிலும் இறங்கவில்லை.