கோலாலம்பூர் – அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வரும் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இவ்வாண்டில் மட்டும் இதுவரை 368 பொருட்கள் பறிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக காவல்துறை கூறுகின்றது.
கடந்த ஆண்டு எண்ணிக்கையான 268 சம்பவங்களை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, 100-க்கும் அதிகமான சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
எனவே பொதுமக்கள், சாலையில் செல்கையில், எப்போதும் கவனமாக தமது உடமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் படியும் காவல்துறை எச்சரித்திருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர், டத்தாரான் மெர்டேக்கா முன்பு சுற்றுலா வந்த பெண் ஒருவர் தனது கைப்பேசியின் மூலம் தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் பின்னால் மோட்டாரில் வந்த இளைஞன் அவரது கைப்பையைப் பறித்துச் செல்லும் காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் பரவி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.