Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – சிரித்து, ரசித்துப் பார்க்கும் பேய் படம்!

திரைவிமர்சனம்: ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – சிரித்து, ரசித்துப் பார்க்கும் பேய் படம்!

1362
0
SHARE
Ad

Sangilibungiliகோலாலம்பூர் – சிறு வயதில் சொந்த வீடு இல்லாமல் தனது தாய் ராதிகாவுடன் அவமானப்படும் ஜீவா, அந்த ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருக்கும் பெரிய பங்களா ஒன்றை சொந்தமாக வாங்குவேன் என்று சபதமிடுகிறார்.

அதற்காக வீட்டு முகவராகி பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து, அந்த பங்களாவில் பேய் இருப்பதாகக் கட்டுக் கதை கட்டிவிட்டு, சிங்கப்பூர்காரர் ஒருவரிடமிருந்து அந்த வீட்டை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிவிடுகிறார்.

தான் வாங்கிய புதுவீட்டில் குடியிருக்க தனது தாய் ராதிகா மற்றும் தாய்மாமன் இளவரசு குடும்பத்தாரோடு செல்லும் ஜீவா, அங்கு ஏற்கனவே தம்பி ராமையா குடும்பம் வசித்து வருவதையும், அவர்கள் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடுவதையும்  கண்டு அதிர்ச்சியடைகிறார்.

#TamilSchoolmychoice

ஜீவாவும், தம்பி ராமையாவும் அந்த வீடு தங்களுக்குத் தான் என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, அந்த வீட்டில் நிஜமாகவே பேய் இருப்பது கண்டு அங்கிருந்து எல்லோரும் அச்சத்தில் வெளியேறுகிறார்கள்.

தான் கஷ்டப்பட்டு வாங்கிய வீடு பறிபோனதை எண்ணி வருத்தமடையும் ஜீவா, அந்தப் பேயிடமிருந்து வீட்டை மீட்டாரா? இல்லையா? என்பதே பிற்பாதி சுவாரசியம்.

ரசிக்க

SangiliBungiliKadhavaThoraeபடம் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். ஜீவாவும், சூரியும், தம்பிராமையாவை வீட்டை விட்டு விரட்ட பண்ணும் சேட்டைகள் குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைக்கின்றது.

அதிலும் குறிப்பாக, வீட்டில் பேய் இருப்பதை அறியும் அந்த இடைவேளைக் காட்சி சிரிப்பின் உச்சம். இவர்களுடன் கோவை சரளாவும் சேர்ந்து கொள்ள காமெடிக்குப் பஞ்சமே இல்லாத அளவிற்கு படத்தை கலகலப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் ஐகேஇ.

ஜீவா, ஸ்ரீதிவ்யா காதல் மேலோட்டமாக இருந்தாலும் கூட காமெடி பேய் கதைக்கு பொருந்துவது போல் நன்றாகவே இருக்கின்றது.

Jiiva-SBKT-poster1இவர்களுடன், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி என எல்லோரும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.

பேயாக ராதாரவி மிரட்டுகிறார். அதிலும் பிளாஷ்பேக் காட்சி ஒன்றில் சொத்துக்காக நடக்கும் பிரச்சினைகளைக் கண்டு குமுறும் காட்சி ஒன்றில் மிகவும் சிறப்பாக, தத்ரூபாக நடித்திருக்கிறார் ராதாரவி.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில் பிரம்மாண்ட வீடும், அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளும் மிக எதார்த்தமாகத் தெரிகின்றது. ராதாரவியை பேயாகக் காட்டிய சிஜி வேலைபாட்டில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை தேவையான இடங்களில் காட்சிகளை சுவாரசியமாக்கியிருக்கிறது.

சலிப்பு

SMKTjeeva“கட்டிலுக்கு அடியில் யாரோ இருக்காங்க?” – இது போன்ற வசனம் கொண்ட காட்சியை தமிழில் மட்டுமே அரை டஜன் படங்களில் பார்த்தாகிவிட்டதால், சற்று அலுக்கிறது. இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி யோசித்திருக்கலாம்.

படம் முழுவதும் ரசிகர்களை திரையைக் கவனிக்க வைக்கத் தவறுகிறது திரைக்கதை அமைப்பு. கிளைமாக்ஸ் காட்சியை அடைவதற்கு முன்பாக, என்ன செய்வது என்று தெரியாமல், ஜவ்வாக இழுத்திருக்கிறார்கள்.

அது போன்ற இடங்களில் ரசிகர்கள் போனை எடுத்து வாட்சாப், பேஸ்புக் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். என்றாலும், ஜவ்வாய் நகரும் காட்சிகள் 5, 10 நிமிடங்கள் மட்டுமே ஆங்காங்கே இருப்பதால், படம் சுவாரசியத்தை இழக்கவில்லை.

மொத்தத்தில் – சங்கிலி புங்கில் கதவ தொற – சிரித்து ரசித்துப் பார்க்கும் ஒரு பேய் படம்! குடும்பத்தோடு தாராளமாக திரையரங்கு சென்று பார்த்து சிரித்துவிட்டு வரலாம்.

-ஃபீனிக்ஸ்தாசன்