கோலாலம்பூர் – மலேசியாவின் முன்னணி ஆங்கில இணைய ஊடகமான மலேசியாகினி இணையம் மூலமாக நடத்தி வரும் ஆய்வில், இதுவரையில் அதிகமானோர் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மீண்டும் பிரதமராக வருவதற்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர்.
யார் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்வதில் எதிர்க்கட்சிக் கூட்டணிகளுக்கிடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன.
தற்போது நடந்த வரும் பிகேஆர் கட்சி மாநாட்டில் இளைஞர் பிரிவினர், எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால், அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிம்தான் வரவேண்டும் என்றும் அவர் சிறையில் இருந்து வெளிவரும் வரையில், கட்சித் தலைவி வான் அசிசா இடைக்காலப் பிரதமராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.
மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான ஜசெகவும் இதே போன்றதொரு நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றது.
ஆனால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும், முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம், மகாதீர்தான் சிறந்த பிரதமராக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவார், எனவே அவர் பின்னால் நாம் அணி திரள வேண்டும் என்று அடிக்கடி கூறி வருகிறார்.
பெர்சாத்து கட்சியின் மூத்த தலைவராக மகாதீர் இருந்து வந்தாலும், அந்தக் கட்சியின் சார்பான பிரதமர் வேட்பாளர் மொகிதின் யாசினா அல்லது மகாதீரா என்பது அந்தக் கட்சியினராலே இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில்தான் மலேசியாகினி இணையம் வழி நடத்தும் ஆய்வில், அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்வி வாசகர்களின் முன் வைக்கப்படுகின்றது.
அதில் இதுவரை அதிகமானோர் – சுமார் 78 சதவீதத்தினர் மகாதீரையே அடுத்த பிரதமராகத் தேர்வு செய்திருக்கின்றனர்.