ஜெனிவா – இங்கு திங்கட்கிழமை (22 மே 2017) தொடங்கி நடைபெற்று வரும் 70-வது உலக சுகாதார மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் மலேசியக் குழுவுக்குத் தலைமையேற்றிருக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று செவ்வாய்க்கிழமை மாநாட்டில் மலேசியா சார்பில் உரை நிகழ்த்தினார்.
தனது உரையின் தொடக்கத்திலேயே, மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மலேசியாவின் சார்பில் கண்டனங்களைத் தெரிவித்த டாக்டர் சுப்ரா, அதில் பலியானவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மலேசியாவின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மலேசியா தொடர்ந்து, அனைத்துலக நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வரும் என்றும் அவர் மாநாட்டுப் பேராளர்களிடையே தெரிவித்தார்.
உலகம் எங்கும் தொடர்ச்சியான, நிலையான மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட உலக சுகாதார மாநாடு எடுத்திருக்கும் இலக்குகளை நோக்கி அனைவரும் பாடுபட்டு வரும் வேளையில், விவசாயக் கொள்கைகளும் நகர்ப்புற திட்டமிடல்களும் மக்களின் சுகாதாரத்தை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட வேண்டும் என டாக்டர் சுப்ரா தனதுரையில் வலியுறுத்தினார்.
பட்டினிப் பிணியால் வாடும் மக்கள், சுற்றுச் சூழல் மாசுபட்ட உலகம், பெண்களுக்கு சம உரிமை கிடைக்காத நிலைமை – ஆகியவை இருந்தால் அது ஒரு சுகாதாரமான உலகமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாது எனக் கூறிய டாக்டர் சுப்ரா, பட்டினிப் பிணியையும் ஒழிப்பது என்பதும் நல்ல சுகாதாரம் என்பதும் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டிய இலக்குகள் என்றும் என்றும் தெரிவித்தார்.
“கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது மீதிலான கொள்கை இலக்குகள் அமுலாக்கப்பட வேண்டும். இதனால் காற்றின் தூய்மை மேம்படுத்தப்படுவதால் மக்களின் சுகாதாரமும் பேணப்படும். அதே வேளையில் சமுதாய ரீதியாக மாமிச வகை உணவுகளை குறைத்து உண்பது உடல் பருமன் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு, பருவ நிலை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய ‘மீத்தேன்’ வாயு (methane emission) வெளியேற்றத்தையும் குறைக்கும்” என்றும் டாக்டர் சுப்ரா உலக சுகாதார மாநாட்டில் ஆற்றிய உரையின்போது வலியுறுத்தினார்.
பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்துச் செயலாற்றுவதன் மூலம் அதன் மூலம் கிடைக்கக் கூடிய பலன்களை நான் பகிர்ந்து அனுபவிக்க முடியும் என்றும் தெரிவித்த அவர், நிலையான, தொடர்ச்சியான சுகாதாரச் சூழல் அமைய, துணிச்சலான நடவடிக்கைகளும், புத்தாக்க சிந்தனைகளோடு அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய சுகாதாரப் பொதுக் கொள்கைகளும் அமுலாக்கப்பட வேண்டியது அவசியம் என்பதையும் தனதுரையில் சுட்டிக் காட்டினார்.
படங்கள் – செய்திகள்: நன்றி – drsubra.com