Home கருத்தாய்வு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசியத் தலைவர் தேர்தலில்: பழனி-சுப்ரா போட்டியா?

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசியத் தலைவர் தேர்தலில்: பழனி-சுப்ரா போட்டியா?

1541
0
SHARE
Ad

டிசம்பர் 13 – ஒரு புறம் அனைவரும் பொதுத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், இன்னொரு புறத்தில் ம.இ.காவில் தலைமைத்துவ போராட்டங்கள் தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

நடப்புத் தலைவர் பழனிவேலுவைச் சுற்றி அவரது ஆதரவாளர்கள் அணிவகுத்து நிற்கும் அதே வேளையில்,  அவருக்கு எதிரான குழுவை முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவே முன்னின்று வழி நடத்துவதாக ம.இ.கா. வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒன்று சாமிவேலுவே மீண்டும் தேசியத் தலைவராக நிற்கலாம் அல்லது டாக்டர் சுப்ரவாவை முன்னிறுத்தி அவர் பிரச்சாரம் செய்யலாம். இருப்பினும் பொதுத் தேர்தல் வரவிருப்பதால் முன்னிட்டு, கட்சியில் காதும் காதும் வைத்தாற்போல் அரசியல் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நடப்பு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவை எதிர்த்துப் போட்டியிட நடப்பு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியமும் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. அவருக்கிருக்கும் ஒரே பிரச்சனை, தனது சிகாமாட் தொகுதியில் மீண்டும் நின்று வெற்றி பெறுவதுதான். அப்போதுதான் அவருக்கும் மதிப்பு. எனவே, தற்போது சிகாமாட் தொகுதியை மீண்டும் தற்காத்துக் கொள்ளும் முயற்சிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

ஆனால் உண்மையான ம.இ.கா அரசியல் நிலவரத்தை அறியாமல் வெளியாகும் ஆரூடங்களே இவை என்றும் அதனால் தேசியத் தலைவருக்கான போட்டி உருவாக வாய்ப்பே இல்லை என்றும் ம.இ.கா. வுக்கு நெருக்கமான வேறு சில வட்டாரங்கள் தெரிவித்தன.

சிகாமட் தொகுதியே முக்கியம்….

டாக்டர் சுப்ராவின் முக்கிய நோக்கம் தற்போது முதல் கட்டமாக தனது சிகாமட் தொகுதியை எதிர்வரும் பொதுத்தேர்தலில் தக்க வைத்துக் கொள்வதுதான் என்றும் அதற்கு அடுத்த கட்டமாக தற்போது தான் வகித்து வரும் தேசியத் துணைத் தலைவர் பதவிக்கே மீண்டும் போட்டியிட்டு அதனை தக்க வைத்துக் கொண்டாலே போதும் என டாக்டர் சுப்ரா நினைக்கின்றார் என்றும் அவருக்கு நெருக்கமான ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிகாமட் தொகுதியைத் தக்க வைத்துக கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என்பதாலும், ஜ.செ.க தலைவர் லிம் கிட் சியாங்கே சிகாமட் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்ற ஆரூடங்கள் நிலவுவதாலும், டாக்டர் சுப்ராவைப் பொறுத்தவரை அவரது முதல் நோக்கம் தற்போது பொதுத் தேர்தல்தானே தவிர கட்சித் தேர்தல்கள் அல்ல என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ஏற்கனவே பல ஆண்டுகளாக முழு அமைச்சர் பதவியை அவர் வகித்து விட்டதால், தேசியத் தலைவரானாலும் புதிதாக எந்தப் பதவியையும் அவர் அடையப் போவதில்லை.

எனவே, தேசியத் தலைவர் தேர்தலில் குதித்து பலரின் வெறுப்பிற்கு ஆளாகி, எல்லாவற்றுக்கும் மேலாக பழனிவேலுவுடன் அரசியல் மோதலில் ஈடுபட்டு அரசியலில் தற்போது இருப்பதையும் இழப்பதை விட, இப்போதிருப்பது போல் தொடர்ந்து இருப்பதே சிறப்பான முடிவு என டாக்டர் சுப்ரா கருதுவதாக தெரிகின்றது.

தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை?

தேசியத் தலைவர் தேர்தலுக்கான கோதாவில் இறங்குவதற்கு டாக்டர் சுப்ரா தயங்குவதற்கு முக்கிய காரணம், தேசியத் தலைவரை எதிர்த்துப் போட்டியிட யாராவது விரும்பினால் அவர்கள் குறைந்த பட்சம் 300 கிளைகளின் ஆதரவைப் பெற வேண்டும்.

தேசியத் தலைவருக்கான ஒரு வேட்பாளர் 50 வேட்பாளர் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வேட்பு மனுவிலும் ஒரு ம.இ.கா கிளைத் தலைவர் முன்மொழிந்து 5 கிளைத் தலைவர்கள் வழிமொழிய வேண்டும். இவர்கள் மற்ற வேட்பாளர்கள் யாரையும் முன்மொழியவோ, வழிமொழியவோ முடியாது. எனவே, மொத்தம் 300 கிளைத் தலைவர்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட வேண்டும்.

கடந்த கால ம.இ.கா வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், கிளைத் தலைவர்களெல்லாம் ஆதரவு என்று வாய்கிழியப் பேசுவார்களே தவிர, கையெழுத்து என்று வரும்போது சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொள்வார்கள். தேசியத் தலைவருக்கு எதிராக ஏன் ஒரு வேட்பாளரை முன்மொழிந்து தங்களின் அரசியல் எதிர்காலத்தை தாங்களே கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் 300 கிளைத் தலைவர்களின் ஆதரவை டாக்டர் சுப்ரா பெறுவது என்பது கடுமையான சவாலாக இருக்கும் என்பதால் மீண்டும் துணைத் தலவருக்கே போட்டியிட்டு தனது தற்போதைய பதவியைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித் தனமாக இருக்கும் எனவும் டாக்டர் சுப்ராவின் ஆதரவாளர்கள் சிலர்  கருதுகின்றனர்.

அப்படியே தேசியத் தலைவருக்கு போட்டியிட்டு தோற்றுவிட்டால், அதன்பின் தனது அரசியல் எதிர்காலம் நிச்சயமற்றதாகி விடும் என்பதாலும் டாக்டர் சுப்ரா தயங்குவதாக கூறப்படுகின்றது.

டத்தோஸ்ரீ சாமிவேலுவின் ஆதரவு பலமா? பலவீனமா?

டாக்டர் சுப்ரா பழனிவேலுவை எதிர்த்துப் போட்டியிடுவார் என்பதற்கு வலுவான காரணமாக கூறப்படுவது அவருக்கு முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் ஆதரவும், பிரச்சாரமும், நேரடியாகவோ, அல்லது பின்னணியிலோ இருக்கும் என்பதுதான்.

பரவலாக ம.இ.காவினர் சாமிவேலு மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாலும் அவரது தலையீடு கட்சியில் தொடர்வதையும் மீண்டும் ஓங்குவதையும் பலர் விரும்பவில்லை. சாமிவேலுவின் நெருங்கிய ஆதரவாளர்கள் பலர் தற்போது சாமிவேலுவை விட்டு ஒதுங்கியிருப்பதையும், அவருடன் தொடர்பில் இல்லாமல் இருப்பதையும் ம.இ.காவினர் சுட்டிக் காட்டுகின்றனர்.

சாமிவேலுவே, பல இடங்களில் யாரும் தன்னை வந்து பார்ப்பதில்லை என்றும், தன்னுடன் தொடர்பு கொள்வதில்லை என்றும் வருத்தப்பட்டிருப்பதாக தகவல்களும் கசிகின்றன.

இருப்பினும், பழனிவேலு கட்சித் தலைவர்களுடன் அணுக்கமான தொடர்பை வைத்திருக்கவில்லை. யாரையும் சுலபமாக சந்திப்பதில்லை. ஆனால் சாமிவேலுவோ ம.இ.கா கட்சித் தலைவர்களுடனும் தன்னுடைய பழைய ஆதரவாளர்களுடனும் இன்னும் அணுக்கமான தொடர்புகளை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த சூழ்நிலையில், எவ்வாறு முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் தலையீட்டை அம்னோவில் பலர் விரும்புவதில்லையோ அதே போன்று, ம.இ.காவிலும் சாமிவேலுவின் தலையீட்டையும் பலர் விரும்பவில்லை.

யார் அடுத்த தேசியத் தலைவராக வர வேண்டும் என்ற அவரது விருப்பத்தை கட்சிக்குள் நுழைப்பதை பல ம.இ.காவினர் எதிர்க்கின்றனர்.
அதனால் டாக்டர் சுப்ராவை சாமிவேலு ஆதரிக்க முன்வந்தால், வேறு சில காரணங்களாலும் சுப்ராவுக்கு மேலும் பலவீனங்கள்தான் நேருமே தவிர அதனால் அவர் அரசியலில் பலம் பெறுவதற்கோ, தேசியத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்வதற்கோ சாத்தியமில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

எனவே, இறுதி நேரத்தில் டாக்டர் சுப்ரா தேசியத் தலைவர் தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு, பழனிவேலுவுக்கே தனது ஆதரவை மறு உறுதிப்படுத்திக் கொள்வார் என்றும் மறுபடியும் தேசியத் துணைத் தலைவர் பதவியைத் தற்பாத்துக் கொள்வார் என்றும் தெரிகின்றது.