Home கலை உலகம் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் புதுப்படங்கள்

எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் புதுப்படங்கள்

1294
0
SHARE
Ad

டிசம்பர் 22 – தமிழ்ப்படங்களுக்கும் உலகெங்கும் உள்ள தமிழ்ப்பட ரசிகர்களுக்கும் உள்ள ரசனைகளும் உறவுகளும் அலாதியானவை. ஒரு முக்கிய நடிகரின் அல்லது இயக்குநரின் படம் அறிவிக்கப்பட்டவுடன், தொடர்ந்து அந்த படத்தைப் பற்றிய தகவல்களையும் அதன் பாடல் வெளியீட்டையும், அதன் கதை என்ன, மற்ற சிறப்பம்சங்கள் என்ன என்பதையும் பற்றி தெரிந்து கொள்வதற்கு தமிழ்ப்பட ரசிகர்கள் காட்டும் அதீத ஆர்வம் மற்ற மொழிப் படங்களுக்கும் இந்த அளவுக்கு இருக்குமா என்பது சந்தேகமே!.

அடுத்த சில மாதங்களில் வெளியீட்டிற்காக வரிசை பிடித்துக் காத்திருக்கும் தமிழ்ப் படங்களில் சில அவ்வாறுதான் பரபரப்பை ஏற்படுத்தி எப்போது வெளிவரும் என்று தமிழ்ப்பட ரசிகர்களின் நாடித் துடிப்பை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

கமலின் “விஸ்வரூபம்”

#TamilSchoolmychoice

சப்தமில்லாமல் எடுக்கப்பட்டு வந்த இந்த படம் தற்போது பெருமளவில் முடிக்கப்பட்டு, படத்தின் முன்னோட்டமும் (டிரெய்லர்) வெளியிடப்பட்டு விட்டது. கமலின் வித்தியாசமான தோற்றம், சலங்கை ஒலிக்குப் பிறகு அவரது பாரம்பரிய நடனத் திறனைக் காட்டப்போகும் படம், அமெரிக்காவில் படப்பிடிப்பு, தீவிரவாதிகளின் கதை என்றெல்லாம் விவரங்கள் வெளியே வரத் தொடங்க, தமிழ்நாடே தற்போது எதிர்பார்ப்பில் ஏங்கிக் கிடக்கின்றது.

கமல் நடிப்பில் கடைசியாக வெளிவந்த, “மன்மதன் அம்பு” ரசிகர்களை ஏமாற்றி விட்டது என பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ள காரணத்தால், “விஸ்வரூபம்” படத்தில் கமல் தனது முழு கவனத்தையும் செலுத்தி, அவரே இயக்குநராக இருந்து படத்தை அங்குலம் அங்குலமாக செதுக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. ஏழு ஆண்டுகளாக தனது மனத்தில் உருவாக்கி வைத்திருந்த கதையை திரையில் கொண்டு வந்திருப்பதாக கமலே கூறியிருக்கின்றார்.

படத்தில் “கதக்” நடன ஆசிரியராக வரும் கமல், அண்மையக் காலமாக விட்டுப் போன தனது நடனத் திறனை மீண்டும் மெருகுபடுத்தி. திறன் வாய்ந்த நடன ஆசிரியர்களின் உதவியோடு, தனது நடனக் காட்சிகளை அமைத்திருப்பதால், பழைய சலங்கை ஒலி கமலை பார்க்க முடியுமா என்ற ஆவலை இப்படம் ரசிகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.

சில படங்களிலேயே நடித்திருந்தாலும் ரசிகர்களை தனது அழகாலும், குரல் வளத்தாலும் கவர்ந்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா கமலோடு ஒரு நாயகியாக இணைந்திருக்கின்றார். மற்றொரு நாயகியாக வலம் வரப் போகின்றவர் பூஜா குமார். நாசரும் நடித்திருக்கும் இப்படத்தில் கமலின் இரண்டாவது மகள் அக்சரா உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கின்றாராம்.

இப்படியாக சுவாரசியான தகவல்கள் நீண்டு கொண்டே போகின்ற அளவுக்கு “விஸ்வரூபம்” தமிழ்ப்பட ரசிகர்களிடையே விஸ்வரூப எதிர்பார்ப்பை விதைத்திருக்கின்றது.

 ரஜினியின் “கோச்சடையான்”

தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை ரஜினியின் புதுப்பட அறிவிப்போ எப்போதும் புதுமையானது. படம் ஆரம்பிக்கும்போதுதான் மற்ற நடிகர்களின் அறிவிப்பும் தகவல்களும் வெளியாகும். ஆனால் ரஜினிக்கோ, அவர் எந்த இயக்குநரிடம் கதை கேட்கின்றார் என்பதிலிருந்தே ஆரூடங்கள் புயலெனப் புறப்பட்டுவிடும்.

அவரது படத்தின் கதை என்ன என்ற ஊகங்கள் ஒரு புறம் இருக்க, அதில் எந்த மாதிரியான “பஞ்ச்” வசனங்கள் இடம் பெற வைக்கலாம் என தமிழக பத்திரிக்கைகள் தனது வாசகர்களிடையே போட்டிகளையே நடத்தும். ஒரு தமிழக வாரப் பத்திரிக்கை கோச்சடையான் என்ற பெயரில் ஒரு சரித்திர நாவலையே எழுதத் தொடங்கிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

லண்டனில் படப்பிடிப்பு, அனிமேஷன் எனப்படும் புதிய வகை சினிமா உத்தி, ரஜினிக்கு இரட்டை வேடம் என்றெல்லாம் தகவல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்க மேற்பார்வையின் வளர்ந்து கொண்டிருக்கும் இப்படம் தீபாவளி சமயத்தில் திரை காணும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

பாரதிராஜாவின் “அன்னக் கொடியும் கொடிவீரனும்”

“என் இனிய தமிழ் மக்களே” எனத் தொடங்கும் கரகரக் குரலுக்கு கைதட்ட தமிழ்ப்பட ரசிகர்கள் எப்போதும் ரெடி. ஆனால் இயக்குநர் பாரதிராஜாதான் அண்மையக் காலமாக ரசிகர்களை நிறையவே ஏமாற்றி விட்டார்.

இவரது பெயரைக் குறிப்பிட முடியாமல் தமிழ்ப் பட உலகின் சரித்தர ஏடுகளை எழுத முடியாது என்ற அளவுக்கு சாதனை புரிந்து, முத்திரை பதித்த பாரதிராஜா, அடுத்தடுத்த இயக்கி வந்த பல படங்கள் தோல்விப் படங்களாகவே அமைய, இறுதியாக வெளிவந்த “பொம்மலாட்டம்” தொழில் நுட்ப ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும், வசூலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.அதன் இந்திப் பதிப்பும் நானா படேகர் என்ற சிறந்த நடிகர் நடித்தும் இன்னும் ஏதோ காரணங்களால் வெளியிட முடியாமல் முடங்கிக் கிடக்கிறதாம்.

இந்நிலையில், தனது சொந்த ஊரான தேனீயில் கே.பாலசந்தர், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குநர் சிகரங்களின் முன்னிலையில் பிரம்மாண்டமான அளவில் தொடக்கவிழாவுடன் தொடங்கியுள்ள பாரதிராஜாவின் கிராமத்து காவியம் “அன்னக் கொடியும் கொடிவீரனும்” எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் மற்றொரு படமாகும்.

அமீர் நடிக்கின்றார் என்பதும், அவரும் பாரதிராஜாவும் கைகோர்க்கின்றார் என்பதும் படத்தின் விளம்பரத்தை ஆரம்பத்தில் கூட்டினாலும் பின்னர் அமீர் விலகல் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சம் சுணங்கி விட்டது என்றுதான் கூறவேண்டும்.

ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயகியாகவும் புதுமுகம் ஒருவர்  கதாநாயகனாகவும் நடிக்கும் இப்படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சுபிக்சா என்ற புதுமுகமும் தற்போது இந்தப் படத்தில் இணைந்துள்ளாராம்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்னும் சுறுசுறுப்பு குறையாமல் உலா வரும் பாரதிராஜா, தான் கிராமத்து ராஜாதான் என்பதை  இப்படம்  மூலம் நிரூபிப்பார் என தமிழ்த் திரையுலகம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றது.