Home Featured நாடு உலுசிலாங்கூர் நாடாளுமன்றம் – மஇகா மீண்டும் வெல்ல முடியுமா?

உலுசிலாங்கூர் நாடாளுமன்றம் – மஇகா மீண்டும் வெல்ல முடியுமா?

1103
0
SHARE
Ad

subra-mic youth-kalumpang-

கோலாலம்பூர் – கடந்த சனி, ஞாயிறு (27,28 மே 2017) இரண்டு நாட்கள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியை மையப்படுத்தி நடந்திருப்பதாலும், அதில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டிருப்பதாலும், அரசியல் பார்வையாளர்களின் கவனம் மீண்டும் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி மீது பதிந்திருக்கிறது.

மஇகா தேசிய இளைஞர் பகுதியின் சார்பில் இரண்டு நாட்கள் பொதுத் தேர்தல் மீதான பயிற்சிக் கருத்தரங்கம் களும்பாங் நகரில் நடத்தப்பட்டது. இது உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கிய நகராகும்.

#TamilSchoolmychoice

subra-kalumpang-mic youth-1களும்பாங்கில் நடைபெற்ற இளைஞர் கருத்தரங்கில் உரையாற்றும் டாக்டர் சுப்ரா…

இதில் டாக்டர் சுப்ரா கலந்து கொண்டு இளைஞர் தலைவர்களிடையே உரையாற்றினார்.

உலுசிலாங்கூர் மஇகாவின் தொகுதி – விட்டுத் தரமாட்டோம்!

அதே இரண்டு நாட்களில் உலுசிலாங்கூர் தொகுதி மஇகா தலைவர்களுக்கான பொதுத் தேர்தலுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று பேராக் மாநிலத்தின் சுங்கை நகரில் மஇகா உலுசிலாங்கூர் தொகுதி ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

உலு சிலாங்கூர் தொகுதி ம இ கா ஏற்பாட்டில் நடைபெற்ற மஇகா தலைவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சனிக்கிழமை (27 மே 2017) கலந்து கொண்டு உரையாற்றிய டாக்டர் சுப்ரா “உலுசிலாங்கூர் தொகுதி மஇகாவின் தொகுதி. இதனை யாருக்கும் விட்டுத் தரமாட்டோம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ம இ கா வேட்பாளர் இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதை அனைவரும் உறுதிச் செய்ய வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்.

hulu selangor-parliament-2013-results

2013- பொதுத் தேர்தலில் கமலநாதன் பெற்ற வாக்கு விவரங்கள்….

இதே நிகழ்ச்சியில் நடப்பு உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி துணை அமைச்சருமான டத்தோ ப.கமலநாதனும் டாக்டர் சுப்ராவோடு கலந்து கொண்டார்.

இருப்பினும், உலு சிலாங்கூர் தொகுதியில் மீண்டும் கமலநாதன் போட்டியிடுவாரா என்பது குறித்த எந்தவித அறிவிப்பையும் டாக்டர் சுப்ரா வெளியிடவில்லை.

இதுவரையில் மஇகா சார்பாக எந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து டாக்டர் சுப்ரா பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்றாலும், தேசிய முன்னணியின் ‘வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்’ (Winning Candidates) என்ற சித்தாந்தந்தின்படி இரண்டு முறை உலு சிலாங்கூர் தொகுதியில் வென்ற கமலநாதனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

subra-ulu selangor-retreat-sungkai-27052017 (1)சுங்கையில் நடந்த உலு சிலாங்கூர் தலைவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியில் மாலை அணிவிப்பு

இருப்பினும், இந்தத் தொகுதியை அம்னோவும் குறிவைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

அதே வேளையில் சிலாங்கூரை ஆண்டு வரும் பிகேஆர் கட்சிக்கும் உலு சிலாங்கூர் ஓர் உறுத்தலாக இருந்து வருகின்றது. காரணம், சிலாங்கூரின் பல முக்கிய நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கும் பக்காத்தான் கூட்டணி உலு சிலாங்கூரில் மட்டும் தோல்வியைத் தழுவியது.

இதனால், இந்தத் தடவை, சிறந்த வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, அந்தத் தொகுதியை வென்றெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பிகேஆர் கட்சி பாடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

உலுசிலாங்கூர் – மற்ற மஇகா வேட்பாளர்கள் யார்?

Sivarajjh-MIC Youth leaderஇந்த சூழலில்தான், மஇகா மீண்டும் உலு சிலாங்கூரில் போட்டியிடும் என டாக்டர் சுப்ரா அறிவித்திருக்கிறார்.

உலு சிலாங்கூர் தொகுதி மீது இரண்டு மஇகா பிரமுகர்கள் குறி வைத்திருப்பதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவர், மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் (படம்). இளைஞர் பகுதித் தலைவர் என்ற முறையில் ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் சிவராஜ்.

சுங்கை சிப்புட், சுபாங் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், உலு சிலாங்கூர் மீதும் அவருக்கு ஆர்வம் இருக்கிறது எனவும், அதன் காரணமாகவே இளைஞர் பகுதியின் தேர்தல் பயிற்சிக் கருத்தரங்கை அங்கே அவர் நடத்தியதாகவும், சில மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதித் தலைவர் பாலசுந்தரமும் போட்டியிட ஆர்வம்

இதற்கிடையில், மஇகா உலு சிலாங்கூர் தொகுதியின் புதிய தலைவர் பாலசுந்தரமும் இந்தத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் கொண்டிருப்பதாக சில உள்ளூர் மஇகா தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பட்டதாரி ஆசிரியரான பாலசுந்தரம் நீண்ட காலமாக உலு சிலாங்கூர் தொகுதியில் சேவையாற்றி வந்திருப்பவர்.

நீண்ட காலமாக மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைவராக இருந்து வந்த தொகுதி உலுசிலாங்கூர். ஆனால் தேசியத் தலைவரான பின்னர் அந்தத் தொகுதியை தனக்கு நெருக்கமானவராகவும், தொகுதி செயலாளராகவும் இருந்து வந்த சிதம்பரத்திடம் விட்டுக் கொடுத்தார் பழனிவேல்.

subra-ulu selangor-retreat-sungkai-27052017 (4)சுங்கையில் நடந்த உலுசிலாங்கூர் தொகுதித் தலைவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கில் டாக்டர் சுப்ராவுடன் தொகுதித் தலைவர் பாலசுந்தரம் (சுப்ராவுக்கு வலது புறம்) நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கமலநாதன்…

இருப்பினும் தொடர்ந்து வந்த கட்சிப் போராட்டத்தினால், பழனிவேல் பக்கம் சிதம்பரம் சாய்ந்ததால், உலுசிலாங்கூர் தொகுதித் தலைவர் பதவியைக் கைப்பற்றிய பாலசுந்தரம், இந்த முறை தனது கல்வித் தகுதியாலும், தனது பணிகள் மற்றும் தொகுதித் தலைவர் அடிப்படையிலும் உலுசிலாங்கூரில் போட்டியிட தலைமைத்துவத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக உலுசிலாங்கூர் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால்தான், இளைஞர் பகுதி களும்பாங்கில் தேர்தல் பயிற்சிக் கருத்தரங்கை நடத்திய அதே நாட்களில், தனது உலு சிலாங்கூர் தொகுதித் தலைவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்களை பேராக், சுங்கையில் நடத்தியிருக்கின்றார் பாலசுந்தரம் எனக் கூறப்படுகின்றது.

கமலநாதன் போன்ற வலிமையான வேட்பாளர், படித்தவர்களும், நடுத்தர மக்களும் அதிகம் வசிக்கும் சுபாங் போன்ற தொகுதியில் நிறுத்தப்பட்டால், அந்தத் தொகுதியை மஇகா மீண்டும் வென்றெடுக்கும் வாய்ப்பு ஏற்படும் என்ற சிந்தனையும் கட்சியில் தற்போது நிலவுகின்றது.

subra-ulu selangor-retreat-sungkai-27052017 (3)சுங்கையில் நடந்த கருத்தரங்கில் உலுசிலாங்கூர் தலைவர்களிடையே உரையாற்றும் டாக்டர் சுப்ரா…

இதையெல்லாம் தெரிந்துதானோ என்னவோ உலு சிலாங்கூர் தொகுதித் தலைவர்களிடையே தேர்தல் பயிற்சிக் கருத்தரங்கின்போது சுங்கையில் உரையாற்றிய டாக்டர் சுப்ரா,

“குறைகள், பிரச்சனைகள் இல்லாத நாடும் கிடையாது, வீடும் கிடையாது, கட்சியும் கிடையாது.  எனவே, நாம் நிறைகளை அடையாளம் கண்டு, போற்றும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் சமூகம் வளர்ச்சி காண முடியும். ம இ கா தலைவர்கள் எப்பொழுதும் திறந்த மனப்போக்கைக் கொண்டிருக்க வேண்டும். தலைவர்கள்  இந்திய  சமூகத்துக்காகப் பாடுபட வேண்டும். அரசியலில் கருத்து வேறுபாடுகளால் பிரிவும், பிளவும் ஏற்படுவது சகஜம். ஆனால், அது நிரந்தரமான ஒன்றாக இருக்கக் கூடாது”

– எனக் கூறியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் மஇகாவின் வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்தும், உலுசிலாங்கூர் தொகுதியைக் குறிவைத்திருக்கும் பிகேஆர் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை வைத்தும்தான்,

உலு சிலாங்கூர் தொகுதியை மஇகா மீண்டும் வெல்ல முடியுமா என்பதும் தெளிவாகும்!

அதே வேளையில் பாஸ் கட்சியும் இங்கு தேர்தலில் குதித்து மும்முனைப் போட்டி ஏற்படுமானால் – அதன் மூலம் மலாய் வாக்குகள் பிளவு கண்டு – மஇகாவின் வேட்பாளராக யார் நிறுத்தப்பட்டாலும், அவர்களின் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகின்றது.

-இரா.முத்தரசன்