ஈப்போ – கட்சித் தலைவர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், 14-வது பொதுத்தேர்தலிலும் புந்தோங் தொகுதியில் மஇகா தொடர்ந்து போட்டியிடும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சரும், மஇகா மத்தியச் செயலவை உறுப்பினருமான டத்தோ எம்.சரவணன் தெரிவித்திருக்கிறார்.
தற்போது ஜசெக-வின் கையில் இருக்கும் அத்தொகுதியில் மஇகா போட்டியிடாமல் போவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் சரவணன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து சரவணன் மேலும் கூறுகையில், தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சி என்ற முறையில், மஇகா பல்வேறு திட்டங்களையும், நடவடிக்கைகளையும் புந்தோங் தொகுதியில் செய்து வருவதாகவும், குறிப்பாக அப்பகுதி இளைஞர் சமுதாயத்திடையே அவை மிகுந்த வரவேற்பினைப் பெற்று வருவதாகவும் சரவணன் தெரிவித்தார்.
“புந்தோங்கில் மஇகா எடுக்கும் நடவடிக்கைகள் யாவும் 14-வது பொதுத்தேர்தலுக்கான தயார் நிலை என்பது அல்ல. அப்பகுதி மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நிலையை மேம்படுத்தும் நடவடிக்கையாகும். குறிப்பாக இந்திய சமுதாயம்” என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காற்பந்தாட்டக் குழுவிற்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சரவணன் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 5-ம் தேதி, மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் வெளியிட்ட அறிக்கையில், தேசிய முன்னணியின் தலைமைத்துவம் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குமானால் அதில் போட்டியிட தமது கட்சி ஆவல் கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.
அது குறித்துக் கருத்துத் தெரிவித்த சரவணன், “அவரது விருப்பத்திற்கு மதிப்பளிக்கிறோம். ஆனால் புந்தோங் தொகுதியில் போட்டியிடத் தகுதிவாய்ந்தவர்கள் இன்னும் மஇகா-வில் இருக்கிறார்கள்” என்று சரவணன் கூறினார்.