புதுடெல்லி – தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக டிடிவி தினகரன் மீது சுமத்தப்பட்டிருந்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு உதவி செய்ததாக தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா புரோக்கர்கள் நாது சிங், லலித் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தினகரனும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை, நேற்று வியாழக்கிழமை விசாரணை செய்த டெல்லி லஞ்சத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம், தினகரன் மற்றும் மல்லிகார் ஜுனாவை, நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படுகிறது.
அவர்கள் இருவரும் தலா, ஐந்து லட்சம் ரூபாய் சொந்த ஜாமின் மற்றும் அதே தொகைக்கு, தலா, 2 நபர்களின் உத்தரவாதத்துடன் விண்ணப்பித்தால் இவர்களை ஜாமினில் விடுவிக்கலாம் என்று உத்தரவிட்டது.
அதே நேரத்தில், வழக்குத் தொடர்பான ஆதாரங்களை கலைப்பது, சாட்சிகளை மிரட்டுவது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்றும், கடப்பிதழை 2 பேரும் ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி பூனம் உத்தரவிட்டார்.