தேனி : ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊர் தேனி. அவரின் மகன் ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக வென்ற தொகுதியும் தேனிதான். தந்தை-மகன் இருவரில் ஒருவர் இங்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பன்னீர் செல்வமோ, பாஜக சின்னத்தில் போட்டியிட விருப்பமில்லாமல் சுயேட்சையாக இராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார்.
பாஜக தினகரனுக்கு ஒதுக்கிய இரண்டு தொகுதிகளில் ஒன்று தேனி. மற்றொன்று திருச்சி. தேனியில் தானே போட்டியிட முன்வந்திருக்கிறார் டிடிவி.
இதனைத் தொடர்ந்து அவருக்கு தானும் தன் மகன்களும் ஆதரவு தெரிவிப்பதாகவும், அவரைத் தேனியில் போட்டியிடத் தாங்கள்தான் வற்புறுத்தியதாகவும் ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா-டிடிவி.தினகரன் அணியினர் ஒரு பக்கமும், எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் இன்னொரு பக்கமுமாக அதிமுக பிளவு கண்டது. அப்போது தினகரனைத் தீவிரமாக ஆதரித்து முழங்கியவர் தங்கத் தமிழ்ச் செல்வன். ஏற்கனவே தேனி நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றவர்.
2019-இல் டிடிவி தினகரன் அணி சார்பில் தேனி நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டவர், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத்திடம் தோல்வியைத் தழுவினார்.
ஒரு கட்டத்தில் தினகரனுடன் கருத்து முரண்பாடு கொண்டு, தங்கத் தமிழ்ச் செல்வன் வெளியேறி திமுகவில் இணைந்தார். இந்த முறை தேனி நாடாளுமன்றத்தில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்திருக்கிறார் ஸ்டாலின்.
டிடிவி – தங்கத் தமிழ்ச் செல்வன் மோதுவதால் பரபரப்பான நட்சத்திரத் தொகுதியாக மாறியிருக்கிறது தேனி.
அறிமுகம் இல்லாத நாராயணசாமி என்பவர் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.