Home Photo News அரசியல் பார்வை : தமிழ் நாடு – அரசியல் ஆட்டங்கள் தொடங்கின!

அரசியல் பார்வை : தமிழ் நாடு – அரசியல் ஆட்டங்கள் தொடங்கின!

150
0
SHARE
Ad

(இந்தியப் பொதுத் தேர்தல் நிறைவடைந்து விட்டது. தமிழ் நாட்டில் அடுத்த கட்ட அரசியல் ஆட்டங்கள் தொடங்கிவிட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து தன் பார்வையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடைபெற்று முடிந்த இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு முன்னோட்டம்தான். 40 தொகுதிகளை திமுக கூட்டணி வென்றாலும், மத்திய அரசாங்கத்தில் அதற்குப் பங்கில்லை. அதிமுக, பாஜக கூட்டணியில் இடம் பெற்று சில தொகுதிகளை வெற்றி கொண்டிருந்தால் இந்நேரம் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாமே என்று கூறுபவர்கள் உண்டு. அதிமுக கட்சிக்குள்ளேயே சில கலகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

பாஜக வேட்பாளர்கள் யாரும் தமிழ் நாட்டில் வெற்றி பெறவில்லை. எனினும் தமிழ் நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான எல்.முருகன் மீண்டும் இணை அமைச்சராக நியமனம் பெற்றிருக்கிறார். அண்ணாமலை தமிழ் நாடு பாஜக தலைவராக தொடர்கிறார்.

#TamilSchoolmychoice

தமிழர்கள் என்றால் மோடி அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் தொடர்கிறார்கள் என்றாலும் அவர்கள் தமிழ் நாட்டுப் பிரதிநிதிகளாகக் கருதப்படுவதில்லை.

வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினர்.

அதிமுக நிலைமை என்ன?

அதிமுக, பாஜகவுடன் இணைந்திருந்த காலத்தில் தமிழ் நாட்டின் எல்லா ஊடகவியலாளர்களும், அரசியல் பார்வையாளர்களும் எடப்பாடி பழனிசாமியையும், அப்போது இணைத்தலைவராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தையும் சரமாரியாகத் திட்டித் தீர்த்தார்கள். சிறுபான்மை இனங்களுக்கு, அதிமுக கொள்கைக்கு மாறாக  துரோகம் இழைக்கிறார்கள் என்றார்கள். நோட்டாவுக்குக் கீழே உள்ள கட்சியை – மதப் பிரிவினையை உருவாக்கும் ஒரு கட்சியை – தமிழ் நாட்டில் சிவப்புக்கம்பளம் விரித்து உள்ளே கொண்டு வருகிறார்கள் என வசைபாடினார்கள்.

(குறிப்பு : நோட்டா என்பது எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், தங்களின் வாக்குரிமையைச் செலுத்த விரும்பினால் அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வாய்ப்பாகும். None of the Above என்பதன் சுருக்கம்தான் NOTA – நோட்டா. ஒரு தொகுதியில் போட்டியிடும் எல்லாக் கட்சிகளின் சின்னத்துடன் நோட்டா என்ற பெயரும் வேட்பாளரின் பெயர்போல் இடம் பெறும். போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க ஒரு வாக்காளருக்குப் பிடிக்கவில்லையென்றால் அவர் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம். ஒவ்வொரு தொகுதியிலும் சில நூறு அல்லது சில ஆயிரம் வாக்குகள் இவ்வாறு நோட்டாவுக்கு விழும். நமது மலேசியத் தேர்தல்களில் இதுபோன்ற நடைமுறை இல்லை என்பதால் இந்த சிறு விளக்கம்)

இப்போதோ எல்லா அரசியல் ஆய்வாளர்களும் ஒருமித்த குரலில் அதிமுகவும்- பாஜகவும் கூட்டணி அமைத்திருந்தால் தமிழ் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பார்கள் என்கிறார்கள். மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்று கட்சி மேலும் வலிமை பெற்றிருக்கலாம் என்ற ஏக்கக் குரல்கள் எங்கும் ஒலிக்கின்றன. இதுதான் அரசியல்!

ஆனால் எடப்பாடியின் வியூகமும் குறியும் 2026 சட்டமன்றத் தேர்தல்களை நோக்கித்தான். சிறிய அளவிலாவது சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை அதிமுக பக்கம் திருப்புவது என்பதுதான் – எடப்பாடியாரின் கணக்கு.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு இன்னும் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலில் நிலைமை சற்று மாறலாம் – தொடர்ந்து பாஜகவுடன் இணையாமல் அதிமுக தனித்தோ – அல்லது மற்ற கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிட்டால்!

2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப் போகிறார் – அதிமுகவை எவ்வாறு வழிநடத்தப் போகிறார் – என்பதில்தான் அவரின் தலைமைத்துவத் திறமை அடங்கியிருக்கிறது.

எடப்பாடி முன்னே இருக்கும் தேர்வுகள் என்ன?

எடப்பாடி பழனிசாமி

ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியவில்லை என்றாலும் அதிமுக பொதுக்குழு உடையாதவரை – ஒருமித்து எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உறுதியாக நிற்கும்வரை – அதிமுக இப்படியே சட்டமன்றத் தேர்தல்களைச் சந்திக்கும். எடப்பாடியின் தலைமையே தொடரும்.

இன்றைய நிலையில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா யாரும் அதிமுகவுக்குள் நுழைய வாய்ப்பில்லை. இருப்பினும் திரைமறைவில் சில பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகத் தகவல்.

எடப்பாடி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு. திமுக கூட்டணியினர் அவரைக் கடுமையாகச் சாடுவதற்கு வாய்ப்பாகப் போய்விடும். எடப்பாடியின் தனிப்பட்ட கௌரவமும் – சொன்ன சொல் மாறினார் – என கேவலப்படுத்தப்படும். சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணியில்லை என்பதுதான் எடப்பாடியாரின் முந்தைய அறிவிப்பு.

எங்களின் பொது எதிரி திமுகதான் என அண்ணாமலை கூறியிருந்தாலும் அவருடன் இனிமேல் எடப்பாடியார் இணைவது – அதிலும் சட்டமன்றத் தேர்தலில் இணைவது – என்பது சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.

எடப்பாடி முன் இருக்கும் இன்னொரு தேர்வு ஏதாவது ஒரு முனையில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் அணிகளை ஒன்றாக இணைத்து  மீண்டும்  அதிமுகவுக்குள் கொண்டு வருவது! அல்லது அந்த அணிகளைத் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவுடன் இணைப்பது! டிடிவி தினகரன்,  சசிகலாவை விட்டு விட்டு மீண்டும் பன்னீர் செல்வத்தை எடப்பாடி, அதிமுகவுக்குள் இணைப்பதற்கான சாத்தியங்கள்தான் அதிகம்!

பாஜக கூட்டணியை அண்ணாமலை தொடர்ந்து தக்க வைக்க முடியுமா?

கு.அண்ணாமலை

தமிழ்நாடு தலைவராக அண்ணாமலைக்கு இன்னொரு சவால் காத்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தல்வரை நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைத்த கூட்டணியைத் தொடர்ந்து தக்க வைத்திருக்க முடியுமா என்பதுதான் அது!

மத்திய அரசாங்கத்தில் வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படாவிட்டால், தற்போது பாஜகவுடன் இணைந்துள்ள கூட்டணிக் கட்சிகள் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறும் சாத்தியங்களும் அதிகம்.

திமுக கூட்டணி தொடருமா? சிதறுமா?

செல்வப் பெருந்தகை

காங்கிரஸ் தனித்து 99 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவற்றில் 10 தொகுதிகள், திமுகவின் உபயம்! தமிழ்நாட்டில் 9 – புதுச்சேரி 1.

எனவே, என்னதான் வாய் வீராப்பு, செல்வப் பெருந்தகை பேசினாலும் இறுதியில் காங்கிரஸ் தலைமை சொல்படியும், திமுக எடுக்கும் முடிவின்படியும் கொடுக்கப்படும் சட்டமன்றத் தொகுதிகளை வாங்கிக் கொண்டு, தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் அரசியல் நடத்தும்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்வரை ஸ்டாலினால் இதே கூட்டணியை உடையாமல் வைத்திருக்க முடியுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறி!

பிரச்சனைக்குரிய ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள்தான். ஏதாவது காரணம் காட்டி திருமாவளவன் வெளியேறி அதிமுகவுடன் இணைவாரா? (பாஜக, அதிமுக இணைப்பு இல்லாதவரை) அல்லது அவரை வெளியேற்றும் அளவுக்கு  ஸ்டாலினும் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் நகர்வுகளை மேற்கொள்வார்களா?

கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுக பக்கம் கூடுதல் தொகுதிகளுக்காக சாய முற்படலாம்.விடுதலைச் சிறுத்தைகள் விலகினால் அவர்களும் விலகுவார்களா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

பாமக நிலைமை!

பாமகவுக்கு பாஜக தயவால் மாநிலங்களவை உறுப்பினர் பதவி அன்புமணிக்கு வழங்கப்பட்டால், பாமக தொடர்ந்து பாஜக கூட்டணியில் நீடிக்கும். இல்லாவிட்டால் மீண்டும் அந்தக் கூட்டணியிலிருந்து விலகி சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடனோ, திமுகவுடனோ இணையலாம்! விடுதலைச் சிறுத்தைகள், திமுக கூட்டணியில் இருந்து விலகினால் மட்டுமே பாமக திமுக கூட்டணியில் நுழைய முடியும்.

இல்லையேல் மீண்டும் பாமக அதிமுகவுடன் இணையக் கூடும்.

சீமான் தனித்து நிற்பாரா? கூட்டணி அமைப்பாரா?

சீமான்

பொதுத் தேர்தல் முடிவுகளின்படி சீமானின் நாம் தமிழர் கட்சி 8 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல்களில் சீமான் கூட்டணி அமைத்தால் பல தொகுதிகளின் வெற்றி தோல்விகள் மாறக் கூடிய வாய்ப்புண்டு. விஜய்யை ஆதரிப்பதாக சீமான் கோடி காட்டியிருக்கிறார்.

விஜய்யை முதலமைச்சராக சீமான் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர்களுக்கிடையிலான கூட்டணி சாத்தியமாகும். அந்த முடிவை சீமான் எடுப்பாரா?

நடிகர் விஜய் நிலைப்பாடு என்ன?

தமிழ் நாடு 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தைக் கலகலப்பாக்கப் போகிறவர் – தமிழ் நாட்டில் புதிய சூழல்களை உருவாக்கப் போகிறவர் நடிகர் விஜய். கமலைப் போல் பட்டும் படாமல் அரசியல் நடத்தாமல் நடிப்பதிலிருந்து ஒதுங்கி நேரடியாக தீவிர அரசியலுக்குள் நுழைகிறார்.

கோடிக்கணக்கான அவரின் ரசிகர்கள் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் சுவாரசியம்.

இத்தனை அணிகள் வெவ்வேறு திசைகளில் தமிழ் நாட்டு அரசியலை இழுக்கப் போகிறார்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது, 2026 சட்டமன்றத் தேர்தல்களின் முடிவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

– இரா.முத்தரசன்