Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: போங்கு – ஆடம்பரக் கார்களும், அதிபுத்திசாலித்தனமான திருட்டும்!

திரைவிமர்சனம்: போங்கு – ஆடம்பரக் கார்களும், அதிபுத்திசாலித்தனமான திருட்டும்!

939
0
SHARE
Ad

Bongu-Movie-Previewகோலாலம்பூர் – ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தில் ஏமாற்று வேலை செய்யும் கதாப்பாத்திரம் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்த நடராஜன் என்ற நட்டி, அதே பாணியில் கொஞ்சம் மாறுபட்டு கார் திருட்டை அடிப்படையாகக் கொண்டு நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘போங்கு’.

நட்டி, ரூஹி சிங், அர்ஜூனன் ஆகிய மூவரும் கார் விற்பனை நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்கள். அப்போது எம்பி ஒருவர் தனது மகளின் பிறந்தநாள் பரிசாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்குகிறார். அதனை எம்பி மகளிடம் சேர்க்கும் பொறுப்பு நட்டி குழுவிடம் வழங்கப்படுகிறது.

அக்காரை எடுத்துக் கொண்டு போகும் வழியில், மர்ம கும்பல் ஒன்று அவர்களை மடக்கி காரைத் திருடிச் செல்கின்றனர். இதனால் நட்டி, அர்ஜூனன் மீது திருட்டுப் பழி விழுந்து அவர்கள் சிறைக்குச் செல்கிறார்கள்.

#TamilSchoolmychoice

வீண் பழிக்காக சிறைக்குச் சென்ற நட்டி குழுவினர், உண்மையாகவே கார் திருட்டுத் தொழிலுக்கு மாறுகிறார்கள். அப்போது மதுரை பாண்டி என்பவரின் ஆடம்பரக் கார்களைத் திருடப் போக அங்கு கதையில் ஒரு மிகப் பெரிய திருப்பம் ஏற்படுகின்றது. அதன் பின்னர் தான் முதல் பாதியில் போடப்பட்ட பல முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படுகின்றன.

நடிப்பு

நட்டி தனக்கே உரிய துறுதுறுப்பான நடிப்பை வழங்கி இப்படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கார் திருடும் போது நட்டி எடுக்கும் முடிவுகளும், அதற்கேற்ற அவரது முகபாவணைகளும் ரசிக்க வைக்கின்றன.

ரூஹி சிங் இந்தியில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் புதுமுகம். குளோசப் காட்சிகளை முடிந்தவரையில் தவிர்த்திருக்கிறார்கள். காரணம் வாயசைவு பொருந்தவில்லை என்பது தெரிந்துவிடக் கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்திருக்கிறார். ரூஹி சிங்கிற்கு நடிப்பதற்கு பெரிய அளவிலான பங்கு இல்லாவிட்டாலும் கூட அவரது இருப்பு ரசிக்க வைக்கின்றது.

Bongu-Movie-01

ரூஹிக்குப் பதிலாக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகையைப் பயன்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். காமெடியில்  அர்ஜூனனும், ராமதாசும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

அதிலும் ராமதாஸ் அப்பாவியாக நடிப்பை வழங்கி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.

மதுரை பாண்டியாக சரத் லோஹிதாசாவும், போலீஸ் அதிகாரியாக அதுல் குல்கர்னியும் மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, இசை

மகேஸ் முத்துசாமி ஒளிப்பதிவில் சென்னை, மதுரை என பல இடங்களும், சாலைகளும் எதார்த்தமாகப் பதிவாகியிருக்கின்றன.

ஸ்ரீகாந்த் தேவா இசையில், பின்னணி இசை காதைப் பிளக்கும் படி இருக்கின்றது. பின்னணி இசையில் கொஞ்சம் மாறுபட்டு யோசித்திருந்தால், இக்கதைக்கு இன்னும் வலு சேர்த்திருக்கும்.

பாடல்கள் அனைத்தும் சுமார் இரகம் தான். ‘பெர்த்டே’, ‘வெள்ளைக்குதிர’ பாடல்கள் இளைஞர்களைக் கவரும்..

Bongu-Movie-09திரைக்கதை அமைப்பில் முதல் பாதியில் சில முடிச்சுகளைப் போட்டு இரண்டாம் பாதியில் அதற்கான விடை சொல்லியிருப்பது ரசிக்க வைக்கின்றது. என்றாலும், இரண்டாம் பாதியில் கார் திருட்டை மேலோட்டமாகக் காட்டியிருக்கிறார்கள். கதையின் சுவாரசியமே அங்கு தான் என்பதால், அங்கு தான் மெனக்கெட்டு புதுமை புகுத்தியிருக்க வேண்டும். ஆனால் செலவு காரணமாகவோ என்னவோ? அங்கு பாடல்காட்சியின் வழி முக்கியமான அக்காட்சியை நகர்த்திவிட்டார்கள்.

என்றாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, ரசிகர்களை ஏமாற்றாத திரைப்படம்.

மொத்தத்தில் ‘போங்கு’ – ஆடம்பரக் கார்களும், அதிபுத்திசாலித்தனமான திருட்டுமாக வித்தியாசமான கதை!

-ஃபீனிக்ஸ்தாசன்