இஸ்லாமாபாத், மார்ச்.23- பாகிஸ்தான் திரும்பவுள்ள முன்னாள் அதிபர் முஷாரப்பை தீர்த்துக்கட்டுவோம், இவரை கொல்ல தற்கொலைப்படையினர் தயாராகி விட்டனர் என்றும் அவரை பரலோகத்தில் அனுப்புவோம் என்றும் தலிபான் பயங்கரவாதிகள் ஆவேசமாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் நாளை அவர் நாடு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த மிரட்டலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முஷாரப் நான் சாவுக்கு அஞ்ச மாட்டேன். பாகிஸ்தான் மக்களின் நன்மைக்காகவே நான் எனது நாட்டிற்கு செல்கிறேன் என்றார். அங்கு நான் கைது செய்யப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை. பலுசிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியா உதவி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள ஒரு வீடியோவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு: முஷாரப் பாகிஸ்தான் திரும்பும் நேரத்தில் அவர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியோ அல்லது துப்பாக்கியால் சுட்டோ கொல்வோம். இதற்கென சிறப்பு படையினர் தயாராகி விட்டனர். இவர் கொல்லப்படுவது உறுதி என தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
இந்த வீடியோவில் பேசியிருப்பது ஏற்கனவே முஷாரப்பை கொல்ல திட்டமிட்டு முயற்சி செய்த அட்னன் ரஷீத் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க தாக்குதல் நடந்த பின்னர் முஷாரப் தலிபான்களை ஒழிக்க கடும் முயற்சி மேற்கொண்டவர் என்பதால் தலிபான்கள் அவர் மீது ஆத்திரத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நாடு கடத்தப்பட்டது முதல் லண்டன் மற்றும் சவுதியில் தஞ்சம் புகுந்துள்ளார். தற்போது 4 ஆண்டுகள் கழித்து அவர் நாளை ( ஞாயிற்றுக்கிழமை ) பாகிஸ்தான் திரும்புவதாக அறிவித்திருந்தார். சவுதி அதிகாரிகள் சிலரும் இவரது பாக்கிஸ்தான் பயணம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். இவர் இங்கு செல்ல வேண்டாம். இந்த பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.