பெங்களூரு – இன்று திங்கட்கிழமை மாலை பெங்களூரு சிறைச்சாலைக்கு வந்து சசிகலாவைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, அதிமுகவின் இரண்டு தரப்புகளும் இணைவதற்கு 60 நாட்கள் அவகாசம் தருவதாகவும், அந்த 60 நாட்களுக்குள் இரு அணிகளுக்கும் இடையில் இணைப்பு ஏற்படவில்லை என்றால், தங்கள் தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் சசிகலா – தினகரனிடமிருந்து அதிமுக கட்சியும், ஆட்சியும் விலகியிருக்கும் என்றும் அவர்களின் தலையீடு இன்றி அம்மாவின் ஆட்சி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.
பெங்களூரு வந்த தினகரனுடன் 10 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் வந்திருப்பதால், அதிமுக தற்போது ஓ.பன்னீர் செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, மற்றும் தினகரன் அணி என மூன்று பிரிவுகளாக உடைந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.