ஹாங் காங் – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாங் காங் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் சீனா விமானம் ஒன்று, தனது பாதையில் இருந்து விலகி கிட்டத்தட்ட மலை ஒன்றில் மோதும் அபாயத்திற்குச் சென்றிருக்கிறது.
எனினும், கட்டுப்பாட்டு அறையின் துரித நடவடிக்கையால், அவ்விமானத்தின் விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் திசை திருப்பப்பட்டிருக்கிறது.
அவ்விமானத்தின் விமானிக்கு தான் செல்லும் திசை குறித்துச் சந்தேகம் எழுந்திருக்கிறது. எனினும், ரேடியோ அலைவரிசை தொடர்ந்து பரபரப்பாகவே இருந்ததால், அவர் தன்னிச்சையாகத் திசை மாற்றும் முடிவை எடுத்திருக்கிறார் என்று ஏர் சீனா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஏர் சீனா நிறுவனம் பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனம் என்றும், இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி தவறுகள் திருத்தப்படும் என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, அவ்விமானம் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சீனாவின் செங்டு விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கது.