புதுடெல்லி – இந்தியாவின் தலைநகர் டெல்லி அருகே உள்ள குர்கானில், ஓடும் ஆட்டோ ஒன்றில், 22 வயதுப் பெண்ணை, பாலியல் வல்லுறவு செய்த கும்பல், அவரது கைக்குழந்தையை வெளியே வீசி எறிந்தது.
வீசி எறியப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த அக்குழந்தை இறந்ததாக இன்று செவ்வாய்க்கிழமை டெல்லி காவல்துறை தெரிவித்திருக்கிறது.
குர்கான் என்ற பகுதியில் கடந்த மே 29-ம் தேதி, நடந்த இச்சம்பவத்தை, கொலை வழக்கு மற்றும் கூட்டு பாலியல் வல்லுறவு வழக்காகப் பதிவு செய்திருப்பதாக காவல்துறை அறிவித்திருக்கிறது.
தனது கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அப்பெண் தனது கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு குர்கானில் உள்ள தனது தாய் வீட்டிற்கு நள்ளிரவில் புறப்பட்டிருக்கிறார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் ஏறியிருக்கிறார்.
அந்த ஆட்டோவில் இருந்த மூன்று பேர் அப்பெண்ணிடம் பாலியல் சேட்டைகளை ஆரம்பித்திருக்கின்றனர். அப்பெண் கூச்சலிடவே, கைக்குழந்தையும் அழத் தொடங்கியிருக்கிறது. அப்போது அக்காமுகர்கள் குழந்தையை பிடுங்கி வெளியே வீசி எறிந்திருக்கின்றனர். இதில் அக்குழந்தை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறது.
பின்னர் அப்பெண்ணை அக்கும்பல் பாலியல் வல்லுறவு செய்திருக்கின்றனர் என்று காவல்துறை அறிக்கை கூறுகின்றது.
“நாங்கள் நிறைய பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இன்று இவ்வழக்கில் ஒரு முன்னேற்றத்தைக் காணவிருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது” என்று குர்கான் காவல்துறை ஆணையர் சந்தீப் கிர்வார் தெரிவித்திருக்கிறார்.