கோலாலம்பூர் – கருப்பு நிறத்தைக் கேலி செய்வது போலான காட்சிகள் கொண்ட ஹரிராயா காணொளியை அண்மையில் வெளியிட்ட வாட்சன்ஸ் மலேசியா நிறுவனம், பொதுமக்கள் பலர் அதனைக் கடுமையாக விமர்சனம் செய்ததால், அக்காணொளியை நீக்கியதோடு, மன்னிப்பும் கேட்டிருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை வாட்சன்ஸ் நிறுவனம் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட, ‘லெஜெண்டா சுன் ராயா’ என்ற காணொளியில் கருப்பான பெண்கள் அழகானவர்கள் அல்ல, அவர்கள் விரும்பப்படமாட்டார்கள் என்பது போலான காட்சிகள் இருந்தன.
அக்காணொளி வெளியான சில மணி நேரங்களில் மலேசியர்கள் பலரிடமிருந்து வாட்சன்ஸ் நிறுவனத்திற்கு எதிராகக் கண்டனங்கள் எழத் தொடங்கின.
முதலில் அக்காணொளியைத் தற்காத்து விளக்கமளித்த வாட்சன்ஸ் நிறுவனம், பின்னர் நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அக்காணொளியை நீக்குவதாகவும், மலேசியர்களுக்கு ஏற்பட்ட வருத்தத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறது.