கோலாலம்பூர் – ரமலான் பண்டிகையை முன்னிட்டு, 1.6 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு தலா 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்கவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது பேஸ்புக்கில் நஜிப் வெளியிட்டிருக்கும் தகவலில், “அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி! ஹரி ராயாவுக்கு தயார்படுத்திக் கொள்ள 1.6 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு தலா 500 ரிங்கிட்டும், அரசாங்க ஓய்வூதியம் பெறும் 775,000 பேருக்கு தலா 250 ரிங்கிட்டும், சிறப்பு நிதியுதவியாக வழங்குவதை நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.”
“வரும் ஜூன் 9, 2017-க்குள் இந்தத் தொகை வழங்கப்படும். ஹரிராயாவுக்குத் தயாராக, அரசாங்க ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்தத் தொகை உதவியாக இருந்து நிதிச்சுமையைக் குறைக்கும் என்று நம்புகிறேன்” என்று நஜிப் தெரிவித்திருக்கிறார்.