கோயம்புத்தூர் – நான்கு பேரைக் கொன்று அட்டகாசம் செய்த காட்டு யானையை வனத்துறையினர் இன்று மயக்க ஊசி செலுத்தி மயக்க நிலையில் பிடித்து அதன் கால்களையும் கட்டியும் லாரியில் ஏற்றினர்.
இந்நடவடிக்கைக்கு உதவியாக கும்கி யானை ஒன்றும் உதவிக்கு வரவழைக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்களின் ஒத்துழைப்போடு யானை வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் வாக்கில் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இருப்பினும் முதல் ஊசி மூலம் யானை மயக்கமடையவில்லை. தொடர்ந்து மற்றொரு ஊசி துப்பாக்கி மூலம் செலுத்தப்பட்டது.
அதன் பின்னரே யானை மயங்கி சரிந்தது. தொடர்ந்து யானையின் கால்கள் கட்டப்பட்டு, பளுதூக்கி மூலம் யானை லாரியில் ஏற்றப்பட்டது.
சுமார் எட்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னரே யானை பிடிபட்டது.
யானை மீண்டும் அடந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு விடப்படும்.
யானை தாக்கியதில் இதுவரை மேலும் நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.