Home Featured நாடு பெல்டா: நஜிப்புக்கு இன்னொரு தலைவலி ஆரம்பம்!

பெல்டா: நஜிப்புக்கு இன்னொரு தலைவலி ஆரம்பம்!

1107
0
SHARE
Ad

najib-india visit-idli-

புத்ராஜெயா – “பட்ட காலிலேயே படும்! கெட்ட குடியே கெடும்” என்பார்கள். ஒரு காலில் ‘1எம்டிபி’ என்ற அடி பட்டு அந்தக் காயம் ஆறும் முன்னே – அந்தக் காயத்தினால் தேசிய முன்னணிக்கும், அம்னோவுக்கும் பொதுத் தேர்தலிலும் பலத்த ‘அடிவிழும்’ என எதிர்பார்க்கப்படும் நிலையில் – இன்னொரு காலிலும் கடுமையான அடி நஜிப்புக்கு விழுந்திருக்கின்றது ‘பெல்டா’ என்ற ரூபத்தில்!

காரணம், பிரதமரானது முதல் பெல்டாவில் நஜிப் கொண்டு வந்த மாற்றங்கள், சீர்திருத்தங்கள், அதன் துணை நிறுவனமாக பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் பெர்ஹாட்டை பங்குச் சந்தையில் பட்டியலிட்டது என அனைத்தும் நஜிப்பின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்றன.

#TamilSchoolmychoice

felda-logoஅதனால்தான், இன்று பெல்டாவில் எழுந்திருக்கும் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்படும் நேரத்தில், நஜிப்பை நோக்கித்தான் விரல்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

கடந்த வியாழக்கிழமை (ஜூன் 8) பெல்டா தலைமையகத்தில் நுழைந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினர் அங்கிருந்து கட்டுக் கட்டாக, பெட்டி பெட்டியாக ஆவணங்களைக் கைப்பற்றிக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

அதுமட்டுமல்ல! பெல்டா விவகாரத்தினால் அம்னோவின் முக்கியப் புள்ளிகளுக்குள் மோதல் உருவாகியிருக்கின்றது.

shahrir-abdul-samadபெல்டா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜோகூர் பாரு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சமாட்டுக்கும் (படம்), பெல்டாவின் பங்குச் சந்தையிலிடப்பட்ட துணை நிறுவனமான பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் பெர்ஹாட் என்ற நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் இசா சமாட்டுக்கும் இடையில் நிகழும் பனிப்போரின் விளைவுதான் பெல்டா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததற்கான காரணம் என்கிறார்கள் சிலர்.

தற்போதைய நிலவரமாக இரண்டு சமாட்டுகளும் பதவி விலக வேண்டும் என அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் சர்கோஷி அறைகூவல் விட, “அவர்களை விலகச் சொல்ல  இவர் யார்? பிரதமரா?” என பதிலுக்குச் சாடியிருக்கிறார் மற்றொரு அம்னோ உச்சமன்ற உறுப்பினரும், அமைச்சருமான நஸ்ரி அசிஸ்.

அம்னோ தலைவர்களிடையே இதுபோன்ற மோதல்களையும் பெல்டா விவகாரம் உருவாக்கியிருக்கிறது.

1 எம்டிபியை விட பெல்டா தேசிய முன்னணியைப் பாதிக்கும்

Najibworkout

1எம்டிபி – பெல்டா என இரண்டு பூதங்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நிலையில், உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் உறுதியாக்கிக் கொண்டு நஜிப் போராட வேண்டிய தருணம் இது…

ஆனால், அரசியல் ரீதியாகப் பார்த்தால், 1எம்டிபி விவகாரத்தை விட மேலும் மோசமான விளைவுகளை நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக பெல்டா விவகாரம் ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

காரணம், பெல்டா தோட்டங்கள் நாடு முழுமையிலும் பரவிக் கிடக்கின்றன. சுமார் 54 நாடாளுமன்றத் தொகுதிகள், 92 சட்டமன்றத் தொகுதிகளில் பெல்டா திட்டங்கள் ஊடுருவிக் கிடக்கின்றன.

பெல்டாவில் அரங்கேறி வரும் ஊழல் குற்றச்சாட்டு காட்சிகள் அனைத்தும் பெல்டா நிலக் குடியேற்றங்களில் வாழும் வாக்காளர்களைப் பெரிதும் பாதிக்கும்.

1 எம்டிபி விவகாரம் இந்த பெல்டா நிலக் குடியேற்றக்காரர்களின் மனங்களுக்கு மிக அருகாமையில் இருக்கும் ஒன்றல்ல!

அதோடு, 1 எம்டிபி விவகாரங்களின் நிதிப் பரிமாற்றங்கள், வங்கிக் கணக்கு பரிமாற்றங்கள், அங்கே அரங்கேற்றப்பட்ட சில முறைகேடுகளின் ஆழ அகலங்கள் – இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு பெல்டா நிலக் குடியேற்றக்காரர்கள் படித்தவர்களோ, அறிவாற்றல் கொண்டவர்களோ அல்ல!

ஆனால், பெல்டா விவகாரம் அப்படியல்ல!

பல்லாண்டு காலமாக இந்த நிலக் குடியேற்றக்காரர்கள் தங்களின் வியர்வையை சிந்தி வழங்கிய உழைப்பின் காரணமாகவே, பெல்டா இன்றைக்கு இவ்வளவு பெரிய அமைப்பாக, பணம் கொழிக்கும் நிறுவனமாக உருவாகி இருக்கின்றது.

எனவே, பெல்டாவில் ஊழல் என்ற விவகாரம் மேலே குறிப்பிட்டபடி பல நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள தேசிய முன்னணியின் வாக்கு வங்கியைப் பெருமளவில் பாதிக்கும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், போகும் போக்கைப் பார்த்தால், பெல்டா மற்றும் கிராமப்புற வாக்காளர்களிடையே பெல்டா ஊழல் விவகாரங்கள் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள், 1 எம்டிபி தாக்கங்களை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-இரா.முத்தரசன்